hindutva in north east - 2026

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

கட்டுரைகள் இந்தியா லைஃப் ஸ்டைல்
hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோத ஊடுருவல், குடியேற்றத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருப்பது அஸ்ஸாம். கடந்த நூற்றாண்டில் அந்த மாநில மக்கள் தொகையில் 12. 4 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1951 கணக்கெடுப்பின்போது 24.7 சதவீதமாகவும் 2011 ல் 34.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இப்போது அது 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து இருக்குமென நம்பப்படுகிறது. பார்பேடா, பாங்காய் காவான், தாராங், துப்ரி, கோல்பாரா, ஹைலகந்தி, கரீம்கஞ்ஜ் ,மோரிகாவான், நாகான் , ஓஜாய் , தெற்கு சால்மாரா போன்ற மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் இயல்பானதாகவோ உள்ளூர் சார்ந்ததாகவோ ஏற்பட்டது அல்ல. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர்களால் நிகழ்ந்தது. பிரம்மபுத்ரா நதியோர தீவுகளில் முதலில் ஆரம்பித்தது. எல்லையோர மாவட்டமான துப்ரியில் தொடங்கி தாராங் வரையிலும் அதற்கு அப்பாலும் பரவியது. படகுமூலம் நதி வழியாக ஆயிரக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள் போடோலாந்து , தைவா, கைசிங் போன்ற பழங்குடியினர் பகுதிகளுக்குள்ளும், கார்பி – ஆங்லாங் , வடக்கு கச்சார் மலைப்பகுதிகளிலும் குடியேறி உள்ளனர்.

காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல் , ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையில் உள்ள ஊழல், பொதுமக்களின் அலட்சியம் ஆகியவை இந்த கலாச்சார, பொருளாதார, சமூக, புவியியல் ஆக்கிரமிப்புக்கு காரணங்களாகும்.

அஸ்ஸாமில் கடைசியாக நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கணிசமான அளவு உள்ளூர் காரர்கள் வெளியேற்றப்பட்டு சந்தேகத்துக்குரிய குடியுரிமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்க்க பட்டனர். இதனால் அஸ்ஸாமின் அரசியல் களமே மாறியது. மாணவர்கள் போராட்டம் வெடித்தது. 1970 – 80 களில் நடந்த அந்த போராட்டத்தின் மையமாக இருந்தவை மூன்று விஷயங்கள். அன்னியர்களை அடையாளம் காண் , அவர்களை தனிமை படுத்து, வெளியேற்று என்பதே அந்த மூன்று. சுமார் ஆறாண்டு காலம் அஸ்ஸாம் மாநிலம் கொதித்துக் கொண்டு இருந்தது. 1985 இல் அஸ்ஸாம் ஒப்பந்தம் – ராஜீவ் காந்தியின் நடுவண் அரசுக்கும் அஸ்ஸாம் மாணவர் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் – ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் மக்களின் கலாச்சாரம் , பொருளாதார, அரசியல் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதி கூறியது.

காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்ட விரோதமாக ஊடுருவல் செய்தவர்களை அடையாளம் காணும் தீர்ப்பாய சட்டம் (ஐ.எம்.டி.டி ) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அது ஊடுருவல் காரர்களை அடையாளம் காணவே முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஏனெனில் புகார் அளிப்பவர்தான் சம்பந்தப்பட்டவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 2006 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, ராஜீவ் காந்தி போட்ட சட்டம் மிக மோசமானது. எந்த அதிகாரமும் இல்லாதது. அது மட்டுமின்றி ஊடுருவல் காரர்களை அடையாளப்படுத்துவதற்கு பதிலாக அதற்கு தடையாக இருக்கிறது, என்று சாடியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஐ எம் டி டி நீக்கப்பட்டதும் பதுருதீன் அஜ்மல் அஸ்ஸாம் அரசியலில் புகுந்ததும் எதோச்சையாக நடந்த விஷயம் அல்ல . அஸ்ஸாமிய இந்துக்களும் முஸ்லிம்களும் எதை வெறுத்தார்களோ அதன் அடையாளமாக அஜ்மல் விளங்கினார். வாசனை திரவிய வியாபாரியான அவர் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் குரலாக ஓங்கி ஒலித்தார். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இப்போது அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

அஸ்ஸாமில் அஹோம் லச்சித் போர்புக்கான் என்றவொரு அரசர் இருந்தார். பிரம்மபுத்திரா நதியில் படகுகளைக் கொண்ட படையை ஏற்படுத்தி முகலாயர்களை வென்றார். அஸ்ஸாம் மக்களின் மனம் கவர்ந்த அந்த தேசபக்த அரசரின் பதாகையை முன்னிருத்தி ஆர்எஸ்எஸ் அஸ்ஸாம் மக்களிடையே தேசபக்தி கனலை எழுப்பியது. விளைவாக காங்கிரஸ் முதல்வர் கோயிலுக்கு சென்று பூஜை செய்வது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சர்பானந்த சோனோவால், ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா போன்ற இளம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்து பின்னாளில் முதல்வராக ஆகினர்.

சோனோவால் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். 2016 இல் பாஜக.,வின் முதல்வரானார் . அதனால் பல பழங்குடியினர் தேசிய சிந்தனை கொண்டவர்களாக மாறினார். பழங்குடியினரின் நிலங்களும் வங்கதேச முஸ்லிம்களால் அபகரிக்கப்படுவதால் அவர்கள் மற்ற அஸ்ஸாமிய இந்து, முஸ்லிம்களுடன் இணைந்து போராட தொடங்கினர். ஆனால் அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருந்தன. 2020 வரையிலும் ஊடுருவல் செய்த அந்நியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 1.43 லட்சம் பேர்களில் வெறும் 329 பேர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

2021 ல் அஸ்ஸாம் மாநில அரசு புதியதொரு குழுவை அமைத்தது. அஸ்ஸாம் ஒப்பந்தம் நடந்த பிறகு 36 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நான்காவது குழு இது. இந்த குழுவின் பரிந்துரைகள் பலவும் சிறப்பாக இருந்தன. அஸ்ஸாமின் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் 80 லிருந்து 100 சதவீதம் ‘அஸ்ஸாமியர்கள் மட்டுமே’ வேட்பாளராக முடியும். மத்திய ,மாநில அரசு வேலைகள் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நில உரிமை அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. பெருவாரியான மக்கள் பேசும் மாநில மொழியான அஸ்ஸாமி மாநில அரசின் மொழியாகும். இதெல்லாம் அந்த குழுவின் பரிந்துரைகள். இவை மெதுவாக நடைமுறைக்கு வர தொடங்கின. இதனிடையே நில உரிமை தகராறுகள் / மோதல்கள் மாநிலம் முழுவதும் வேகமாக ஏற்பட்டு வருகின்றன.

15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ மகான் ஸ்ரீ சங்கர தேவ். அஸ்ஸாமிய மக்களின் தந்தையாக கருதப்படும் அவர் சமுதாய , சமய தலைவர். நாகாவூனில் அவரது அவதார ஸ்தலம் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது. சர்பானந்த சோனோவால் முதல்வராக இருந்தபோது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

அவருக்கு பிறகு 2021 ல் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா முதல்வரானார். பதவிக்கு வந்தவுடன் தாராங்கில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலை சுற்றி இருந்த வங்கதேச முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். நதியோரம் உள்ள அந்த பகுதி முழுக்கவும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு காருகுந்தி பகுதி. அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றும் போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேஜர் அவினாஷ் உபாத்தியாயா என்ற இந்திய ராணுவ அதிகாரி கூறுகிறார் : பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் வரும்போதெல்லாம் அத்துடன் சேர்ந்து வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் ஊடுருவல் நடக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து விடுவதால் எல்லை காவல் படையினரால் அதை கண்காணிக்கவோ கட்டுப்படுத்துவோ முடிவதில்லை. ஊடுருவல் காரர்கள் நதியோர வளமையான இடங்களில் மக்காச்சோளம் விளைவிக்கிறார்கள். அந்த தட்டைகளையே அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் வந்த அமர்ந்தால் பிறரை எதிர்பார்க்காமல் தங்களுக்குள் தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றுகிறார்கள்.

மங்கால்டோய் என்ற பகுதியில் 85 சதுர கிலோமீட்டர் அளவுக்கு வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் நிலத்தின் மதிப்பை பற்றியும் அது தங்கள் வசமே வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. உபாத்யாயா உள்ளூர் விவசாயிகளுக்கு போர் தொழில் பழக்கினார். விவசாயிகள் அரசின் உதவியுடன் விவசாய திட்டங்களை அமல்படுத்தவும் அதே வேளையில் தங்கள் நிலத்தை பாதுகாக்க போராடவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 1980 களில் அஸ்ஸாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பத்மா ஹசாரிகா இதை முயற்சி செய்தார்.

எங்கள் நிலப்பரப்பு வளமானது. வெள்ளம் வடிந்ததும் விவசாயத்திற்கு தயாராகிவிடும். உரமே தேவையில்லை. ஆனால் இப்போது எங்கள் நிலங்களை மியாக்கள் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) ஆக்கிரமித்து விட்டார்கள், என்கிறார் இஸ்லாம்.அஸ்ஸாமிய முஸ்லீம்களுக்கும் பிரச்சனை உருவாகி வருகிறது. இதை கல்லூரி மாணவரான ஹபீசூர் சரியாக சொல்லுகிறார். நாங்கள் அவர்களுடன் தான் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) வளர்ந்தோம். ஆனால் எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும். எங்கள் மொழி, எங்கள் அடையாளம், எங்கள் பழக்க வழக்கங்களை நாங்கள் பின்பற்றினால் அவர்கள் எங்களை இஸ்லாத்திற்கு முரணானவர்களாக சித்தரிக்கிறார்கள். ஊடகங்களை எங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள், என்கிறார் ஹபீசூர்.

மியாக்கள் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பண பலமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் உள்ளது என்று கூறும் ஹபீசூர் , எங்கள் முன்னோர்கள் இந்த பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இந்த நிலங்களை தங்கள் பெயருக்கு ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்ததில்லை. அவர்களது அறியாமைக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது, என்று புலம்புகிறார்.

நாகாவூர் பகுதியில் பல வைணவ மடங்கள் இருந்தன. அவற்றையும் அதன் சொத்துக்களையும் வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ளனர். ஊடுருவல் காரர்கள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்ல, சட்டபூர்வமாகவே நிலங்களை பதிவு செய்கிறார்கள். போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினரும் உடந்தை. லஞ்சம், ஊழல் வெளிப்படையாக நடக்கிறது.

இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு பரவலாக நடைமுறையில் உள்ளது. அஸ்ஸாமிய முஸ்லிம்கள் அரசு ஒப்பந்த பணிகளை எடுப்பார்கள். அதை வங்கதேச முஸ்லிம்களுக்கு துணை ஒப்பந்தம் மூலம் கொடுத்து விடுவார்கள் . அஸ்ஸாம் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் ஊடுருவல்காரர்களால் பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பிரம்மபுத்திராவின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் படகு மூலம் நடக்கும் ஊடுருவலை தடுக்க முடியும். தடுப்பணை பகுதிகளில் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். பன்றி பண்ணைகளை வைத்து, பன்றி எச்சங்களை மீனுக்கு உணவாக பயன்படுத்தி லாபம் அடையலாம். இதனால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பொருளாதாரமும் மேம்படும், என்கிறார் உபாத்தியாயா. அந்த பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தலாம் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைக்கிறார்.

1946 அக்டோபர் 27 தேதி அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியில் முதல் ஆர் எஸ் எஸ் ஷாகா துவங்கப்பட்டது. 1975 க்குள் அஸ்ஸாமில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஷாகா செயல்பட ஆரம்பித்துவிட்டது. பிரிவினைவாத அமைப்பான உல்பாவுக்கு தேச ஒற்றுமை பணி செய்யும் ஆர் எஸ் எஸ் ஸின் வளர்ச்சி சவாலாக இருந்தது ஆச்சரியமல்ல.

உல்பா பிரிவினைவாதிகள் முரளி மனோகர், ஓம் பிரகாஷ் சதுர்வேதி, பிரமோத் நாராயணன் போன்ற சங்க பிரச்சாரகர்களை கொன்றுள்ளனர். அவர்கள் அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் விட்டு வைக்கவில்லை. மதுமங்கள் சர்மா போன்ற அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் கொன்றுள்ளனர். இதையெல்லாம் 1961 இல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரசாரக்காக வந்த சசிகாந்த் சௌதாய்வாலி என்ற மூத்த முழு நேர ஊழியர் ‘பிரச்சாரக்காக எனது பயணம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர். இது தவிர 540 ஓராசிரியர் பள்ளிகளை வித்யா பாரதி நடத்துகிறது. சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஎச்பி போன்ற அமைப்புகள் இந்த மாநிலத்தில் பல தசாப்தங்களாக பணியாற்றி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.