கடவுளைக் காண முற்படுபவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
சதுரகிரி பயணம் சற்று கடினமான பயணம் தான். அனுபவம் வாய்ந்தவர்கள் துணையோடு பயணம் செய்வதே நல்லது.
மழைக்காலங்களில் இந்த ஆலயத்திற்கு முன்பாக காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மதீர்த்தம் ஓடிக் கொண்டிருக்கும். இதில் நீராடி எழுந்து பிலாவடிக்கருப்பரை வணங்கினால், பாவம் தொலைந்து புண்ணியம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.
![]() |
| பிலாவடி கருப்பர் |
இதை பிரதிஷ்டை செய்தவர் மகாசித்தர் அகத்தியர். அவரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பூஜித்து வழிப்பட்ட லிங்கம் என்பதால் இதன் சக்தி அபரிவிதமானது. இவரிடம் வைக்கும் எந்தவொரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை.
சுந்தர மூர்த்தியை தரிசித்தப்பின் சிறிது தூரம் நடந்தால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடை பெறுகிறது. காலசந்தி (காலை 6 மணி), உச்சி காலம் (நண்பகல் 12 மணி), சாயரட்சை (மாலை 4 மணி), அர்த்த ஜாமம் (மாலை 6 மணி) பூஜைகள் நடக்கின்றன. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அபிஷேகங்களும், அலங்காரங்களும் விமரிசையாக இருக்கும். ஆடி அமாவாசை மிக விஷேசமானது.
![]() |
| சுந்தர மகாலிங்கம் |
சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தப்பின் அடுத்து பக்தர்கள் குவிவது சந்தன மகாலிங்கம் கோயிலுக்குத்தான். 1990-வரை நாணல் செடிகள் அடர்ந்து நிற்கும் வனப்பகுதியாகவே இது இருந்தது. யானை, புலி, கரடி போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து போகும் பகுதி. அதனால் பல பக்தர்கள் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்த கையோடு ஊர் திரும்பி விடுவார்கள்.
இப்போது சந்தன மகாலிங்க கோயிலுக்கு படிக்கட்டுகள் அமைந்த அருமையான பாதை அமைத்திருக்கிறார்கள். எந்த வித பயமுமில்லாமல் சந்தன மகாலிங்கத்தை தரிசித்து மகிழலாம். இங்குதான் சட்டநாத சித்தர் வாழ்ந்து தவம் புரிந்த குகை இருக்கிறது. அருகிலேயே ஸ்ரீசந்தன மகாதேவி அம்மன் சந்நிதி உள்ளது.
இங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் நடந்தால் வனக்காளி, பரவைக்காளி என்று அழைக்கப்படும் காளிதேவி சிலை இருக்கிறது.
![]() |
| காளிதேவியை வணங்கும் டவாலி சக்திவேல் |
இதன் அருகில் அகத்தியர் மரம் உள்ளது. அந்த மரத்தில் அகத்தியர் நிற்பது போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தக் காளிதேவியை வணங்கி வேண்டிக் கொண்டால் மலைப்பாதையில் நமக்கு துணையாக வருவாள் என்பது ஐதீகம்.
![]() |
| மரத்தில் அகத்தியர் |
சதுரகிரியில் இந்த தெய்வங்களையெல்லாம் தரிசித்தப் பிறகு மீண்டும் மலையேற வேண்டும். இந்த மலையேற்றத்துக்கு அனுபவம் நிறைந்தவர்களை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாதை மாறிப்போகும். மலைமீது சுமார் 4 கி.மீ. தூரம் நடந்தால் தவசிப்பாறை வருகிறது. கடினமான பாதை இது. எங்களுக்கு துணையாக டவாலி சக்தி வேல் வந்தார்.
![]() |
| தவசி பாறை போகும் பாதை |
சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவசிப் பாறை சிறியதாகத் தெரியும். தவசிப் பாறைக்கு கீழே தவசி குகை இருக்கிறது. இதில் சித்தர்கள் கண்ணுக்கு தெரியாமல் சூட்சுமமாக வந்து போகிறார்களாம்.
![]() |
| தவசிப் பாறை |
இரண்டடி உயரம் கொண்ட குகை என்பதால் பத்தடி தூரத்துக்கு தவழ்ந்துதான் போக வேண்டும். அதை கடந்தால் 5 அடி தூரத்துக்கு அமர்ந்தபடி முழங்காலிட்டுப் போகலாம். அதையும் கடந்தால் நின்றபடி நடக்கலாம்.
![]() |
| தவசிக் குகையில் நான் |
சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் கொண்டவர்கள் உள்ளே செல்வதை தவிர்ப்பது நல்லது.
இதில் பெரிய மகாலிங்கம் என்பது மிகப் பெரிய பாறையில் இயற்கையாக உருவானது. பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே காட்சி தருவதால், பெரிய மகாலிங்கம் என்கிறார்கள். இந்த பாறை கீழே விழுந்துவிடாமல் மரத்தின் வேர்கள் சடை போல் பின்பக்கம் பிடித்து பாதுகாக்கின்றன.
![]() |
பெரிய மகாலிங்கம் |
பெரிய மகாலிங்கம் இருக்கும் மலைப் பகுதியில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. இங்கு மனிதர்கள் அலையக்கூடாது. சித்தர்கள் அடிக்கடி ஒன்று கூடி சத்சங்கம் நடத்துவார்கள். இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். சித்தர்கள் உலாவிய இடத்தில் நானும் உலாவிக் கொண்டிருக்கிறேன்.
![]() |
| நாகக் கன்னி |
சதுரகிரியில் ஹோட்டல்கள் இல்லையென்றாலும் உணவுக்கு பஞ்சம் கிடையாது. காளிமுத்து கஞ்சிமடம் மிகப் பழமையான மடம். விசேஷ நாட்களில் இரவு 8 மணி வரை இங்கு அன்னதானம் நடைபெறும்.
அதன்பின் மலையேறி வருபவர்கள் உணவின்றி பசியால் தவித்திருக்கிறார்கள். இந்த அனுபவம் மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர் என்கிற ராஜரத்தினத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் எண்ணத்தில் உதித்ததுதான் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் அமைப்பு.
‘அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரிகர் சேவை அறக்கட்டளை’ என்ற பெயரில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து உணவு வழங்கப் படுகிறது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் வந்தால், உடனடியாக உணவு தயார் செய்து பரிமாறுகிறார்கள்.
இதனால் சதுரகிரியில் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. சதுரகிரி மலைக்கு நடந்து சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக ‘டோலி’ வசதியும் இருக்கிறது. இதற்காக தாணிப்பாறையில் சில ஆட்கள் இருக்கிறார்கள். சதுரகிரிக்கு போக வர இரண்டுக்கும் சேர்த்து ரூபாய் 4,000 கூலியாக பெறுகிறார்கள். இதன் மூலம் வயதானவர் களும், நடக்க முடியாதவர்களும் மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.
சித்தர்கள் உலவும் இந்த மலையில் ஏறி இறங்குவதே ஆரோக்கியம் நிறைந்த சுக அனுபவத்தை தரும்.













