― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி - 14)

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)

srivaratharajar kanchi
திருத்தேர் சாத்துபடியுடன் ஸ்ரீ பேரருளாளன். பிரம்மோற்சவம் 7ம் நாள் அதிகாலைkan

வந்தான் வரதன் ( பகுதி – 14 – 1)

உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் !

மேலும் உனக்கான பரிசு விரைவில் என்று அவன் திருவாய் மலர்ந்தருளியதும் அவன் ( பிரமன் ) நெஞ்சில் நிழலாடின !

தேவர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் ஏற்பட்ட ( யாக பசு ) பிரச்சினையும், தான் சாபம் பெற்றதும், ஸரஸ்வதி கோபித்துச் சென்றதும் , பூமியில் வேள்விக்குத் தகுந்த இடம் தேடி அலைந்ததும் , அசரீரி வாக்கும், அதனைத் தொடர்ந்து தான் காஞ்சிக்கு வந்ததும் , ஸரஸ்வதியினாலும் அஸுரர்களாலும் பல தடைகள் தனக்கும் யாகத்திற்கும் ஏற்பட்டதும் , ஓரோர் முறையும் எம்பெருமான் ரக்ஷித்ததும் !! பிரமன் சிந்தித்துக் கொண்டிருந்தான் !

அப்பப்பா !!!! குறைவான சமயத்தில் நிறைவாக எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறி விட்டன !

எண்ணிலாப் பெரு மாயனே ! உன்னை மறவாமையே யான் வேண்டிடும் மாடு ( = செல்வம் ) .. எனக்குற்ற செல்வம் நீயேயன்றோ !

நின் பெருமையைச் சிந்தித்திருப்பதே நமக்குச் சேமமாகும் ( நன்மையாகும் ) !

பரிசாக உனைப் பெறும் நாளை நான் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் !

ஸரஸ்வதியை தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேள்வியை குறையறச் செய்து வரலானான் !

ஒரு நன்னாளில் , உத்தர வேதி ( அக்னி ஸ்தாபனம் செய்து யாகம் செய்யுமிடம் ) நடுவில் , ஆயிரம் கோடி ஸூர்யர்கள் ஒரு சேர உதித்தாற் போல் , ஒரு மஹா தேஜஸ்ஸு தோன்றிற்று !!

வந்தான் வரதன் !!!! வந்தான் வரதன் !!!! என்று அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர் !!

தேவர்களும் , நித்ய முக்தர்களும் ” காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்து ” தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் !!

வரதனுடைய தாமரைக் கண்களோடும் ; செங்கனி வாயொன்றினோடும் ; செல்கின்ற தம் நெஞ்சங்களைத் தொலைந்து போகாது காத்திடப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும் !!

அத்யாச்சர்யமான ப்ராதஸ் ஸவந காலத்தில் வரதன் அவதாரம் !!

அது என்ன ப்ராதஸ் ஸவந காலம் ?!

அறியக் காத்திருப்போம் !!

வரதன் வந்த கதை ( பகுதி 14-2 )

பொன்மலை உதித்தாற் போல் , புண்ணிய கோடி விமானம் தோன்ற , அதனுள் ( ஒளியில் ) ஸூர்யனும் தோற்றுப் போகக் கூடிய அளவிற்கு ; ஒளி வெள்ளமாய் வரதன் வந்துதித்தான் !!

“சைத்ர மாஸி ஸிதே பக்ஷே சதுர்தச்யாம் திதௌ முனே ..சோபனே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே |

வபாஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே.. தாதுரத்தர வேத்யந்த : ப்ராதுராஸீத் ஜநார்த்தந : || ”

சித்திரை மாதத்தில்.. சுக்ல பக்ஷத்தில்..சதுர்தசி திதியில்..ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய , மங்களகரமான ஹஸ்த நக்ஷத்ரத்தில் , “வரந்தரு மாமணி வண்ணன்” வந்து தோன்றினான் !!

ப்ராதஸ் ஸவந காலத்தில் பிரமன் கண்களுக்கு விஷயமானான் இறைவன் !!

ஒரு வேள்வி ( பசு யாகம் ) , காலை , நடுப்பகல், மாலை என த்ரி ( மூன்று ) காலங்களில் நடத்தப்பட வேண்டும் ..அவைகளுக்கு முறையே ப்ராதஸ் ஸவநம், மாத்யந்தின ஸவநம், ஸாயம் ஸவநம் என்று பெயர்கள் !

வபையை ( விலங்கின் உள் சதையை ) எடுத்துச் செய்யப்படும் யாகம் , காலையில் வேள்வியில் செய்யப்படவேண்டும் !!

அச்சமயத்தில் தான் பேரருளாளன் பெருங்கருணையுடன் வந்தருளினான் !!

அனைவருக்கும் ஒரே புகலான ஸாக்ஷாத் நாராயணன் நமக்காக வரதனாய் வந்தார் !! சங்கம் சக்ரம் கதை ஆகியவற்றை ஏந்தியுள்ள பரம்பொருள் நமக்காக இங்கு தோன்றினான் !!

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு , நமக்காக இங்கு ( வரதனாய் ) வந்தது !! நாம் வானேற ( வைகுந்தம் செல்ல ) வழி தருமவன் ; தானே நம் பொருட்டு வரதனாய் வந்தான் !!

இப்படிப் பலரும் , வரதனைக் கண்டு ” தொடர்ந்தெங்கும் தோத்திரம் ” சொல்லினர் !!

“மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் ” போன்றவனான வரதன் பேரழகில் அங்குள்ளார் அனைவரும் தங்களை மறந்திருந்தனர் !!

கண்கள் காண்டற்கரியவன் ; கண் முன்னே நிற்கக் கண்ட நான்முகன் , பித்துப் பிடித்தவனைப் போலே ஆயினன் !!

“அத்தா அரியே என்றுன்னையழைக்க பித்தாவென்று பேசுகின்றார் பிறரென்னை ” என்கிறார் திருமங்கையாழ்வார் !! பக்தியிற் சிறந்தவர்கள் ஊரார் கண்களுக்குப் பித்தர்களாகத் தான் தெரிவார்கள் !!

உந்மத்தவத் , ஜடவத், பிசாசவத் என்று பக்தியின் இயல்புகளை நாரத பக்தி ஸூத்ரம் வருணிக்கின்றது !!

பக்தி {=இறை அன்பு ) என்பதுஒருவருக்கொருவர் வேறுபடும் ! சிலரை பித்தர்களைப் போலே ஒரு இடத்திலே இருக்க விடாமல் சுற்றப்பண்ணும் !! சிலரை ஜடத்தைப் போலே ஒரே இடத்திலே வைத்திருக்கும் !! சிலரை பிசாசத்தைப் போலே ஆக்கும் !!

” மீரா ஹோ கயி மகன்.. ஓ கலி கலி ஹரிகுண் கானே லகீ ” ( மீரா ( கண்ணன் மேல் பைத்தியமானாள் ; தெருத்தெருவாக சுற்றிச் சுற்றி ஹரியின் குணங்களைப் பாடத் தொடங்கினாள் ) என்கிற பக்தை மீராவின் பஜனை ” பக்தி – உன்மத்த நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு !

“ஜட பரதர் ” – பக்தியில் சிறந்தவர். ஜடத்தைப் போல் இருந்தவர் .. இது , பக்தி – ஜட நிலைக்கு எடுத்துக்காட்டு !! பக்தி எதனைத் தான் செய்யாது என்கிறார் சங்கர் பகவத் பாதர் !

வரதனைக் கண்ட பிரமன் திக்குமுக்காடிப் போனான் ! நெடுநாள் பசியுடையவன் சோற்றைக் கண்டாற் போலே , வரதனைக் கண்களால் பருகிக் கொண்டிருந்தான் அயன் ! ” ஆராவமுதே !! ஆராவமுதே !! என்று வாய் வெருவிக் கொண்டிருந்தான் !!

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக , நடுநடுங்கின உடலோடே , என்ன செய்வதென்றறியாதவனாய் இங்குமங்கும் ஓடியோடி வரதனை ( தன் கண்களால் ) விழுங்கிக் கொண்டிருந்தான் !

சிறிது போது , தன் கைகளைத் தட்டிக் கொண்டு , ” வரதராஜா !! தேவராஜா !! தயாநிதே !! பேரருளாளா !! ” என்று சொல்லிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ப்ரதக்ஷிணங்களைச் செய்தான் !!

சுற்றிச் சுற்றிச் வந்தவன் , தன்னை மறந்தவனாய் அவ்வப்போது அப்ரதக்ஷிணமாகவும் சுற்றினான் !!

ப்ரதக்ஷிணம் ப்ரைதி ததாsப்ரதக்ஷிணம் ப்ரயாதி தூரம் புநரேதி ஸந்நிதிம் |

கரேண பஸ்பர்ச மமார்ஜ தத்வபு: ப்ரியேண காடம் பரிஷஸ்வஜே க்ஷணம் ||

என்று பிரமன் நிலையை வருணிக்கிறது புராணம் !!

“அத்யந்த பக்தியுக்தஸ்ய ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம : ”

சிறந்த பக்தியுடையவர்களை ; எந்த சாஸ்த்ரங்களும், சட்டங்களும் , நியமங்களும் கட்டுப் படுத்தவே செய்யாதன்றோ !

பிரமன் நினைத்துக் கொண்டான் ;

வரதன் பக்கத்திலிருந்து ஸேவித்தால் இத்தனை அழகாய் இருக்கிறானே ; தூரத்திலிருந்து வணங்கினால் ??

உடனே தள்ளி விலகி நின்று தரிசித்தான் !

இன்னமும் அழகனாய்த் தெரிந்தான் வரதன் .திரும்பவும் பக்கத்தில் வந்து வணங்கினான்.. மீண்டும் தள்ளிச் சென்று வணங்கினான்.. பக்கத்தில் வருவதும் , பேரருளாளனைத் தொட்டுப் பார்ப்பதும் , அவன் கன்னங்களைக் கிள்ளுவதும், அவனைக் ( வரதனை ) கட்டிப்பிடிப்பதும் ..! அதிகம் கட்டிப்பிடித்தால் குழந்தை வரதனுக்கு வலி ஏற்படுமோ என்று அஞ்சி நடுங்கி தன் கைகளை விலக்குவதும் !! ..

பிரமன் செயல்கள் பலருக்கும் ஆச்சரியமூட்டின !!

நாத்தழும்ப நான்முகன் வரதனைப் போற்றினான் !!

எங்ஙனம் ??

காத்திருப்போம் !!

மணவாள மாமுனிகள் அருளிச் செய்த தேவராஜ மங்களம்

புருஷாய புராணாய புண்யகோடி நிவாஸிநே |
புஷ்பிதோதாரகல்பத்ருகமநீயாய மங்களம் ||

வரதன் வந்த கதை ( பகுதி 14-ல் 3 )

பெருவிசும்பருளும் பேரருளாளன் புன்முறுவல் பூத்தபடி பிரமனுடைய தோத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தான் ! பெருமானுடைய பெருங்கருணையை எண்ணியபடி பிரமனும் அவனைப் போற்றிக் கொண்டிருந்தான் !

இறைவா !! ஆமுதல்வனே !! உன்னை நம்புபவர்களை நீயே வழி நடத்துகின்றாய் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி விட்டது !!

தனி நின்ற சார்விலா மூர்த்தீ !! அடியார்களிடம் உனக்குத்தான் எத்தனை அன்பு.. பக்த வத்ஸலனே ..ப்ருஹஸ்பதி சாபத்தாலும், ஸரஸ்வதி கோபத்தாலும் உடைந்து போயிருந்த நான் ; நீ அருள் செய்திருக்கவில்லை என்றால் தொலைந்தே போயிருப்பேன் .

அசரீரியாய் வந்தாய்.. ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் வரப் பணித்தாய் ! கச்சியைக் காட்டினாய் ! தந்தாவள கிரியாம் இவ்வானை மலையை ( வேள்விக்காகத் ) தந்தருளினாய் !

ஸரஸ்வதி மற்றும் அஸுரர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை தூள் தூளாக்கினாய் !! சம்பராஸுரனால் ஆபத்து வந்த போது , விளக்கொளிப் பெருமானாய் வந்தாய் !! அஸுரர்கள் திரண்டு வந்து தீமை செய்த போது ( வேளுக்கை ஆளரி ) நரஸிம்ஹனாய் வெளிப்பட்டாய் ! ஸரஸ்வதி காளியையும் அஸுரர்களையும் அனுப்பின போது , அஷ்டபுஜப்பெருமானாய் காக்ஷி தந்தாய் ! வல்வினை தொலைத்தாய் !! சயனேசனாய் ( பள்ளி கொண்டானில் ) தரிசனம் தந்தாய் !! திருப்பாற்கடலில் ரங்கநாதனாய்த் தோன்றினாய் !! வெஃகணைப் பெருமானாய் அருள் பாலிக்கின்றாய் !!

இதோ இப்பொழுது, இங்கே அக்னி மத்யத்தில் பேரருளாளனாய்ப் புன்முறுவல் பூக்கின்றாய் !!

உன் அன்பினை , உன் பண்பினை யாரால் கொண்டாட முடியும் ?! நான்மறைகள் தேடியென்றும் / எங்கும் காணமாட்டாச் செல்வனன்றோ நீ !! என் முயற்சியினால் நான் உன்னைக் காணாது தோற்ற போது ; நீயேயன்றோ நிர்க்கதியாய் நின்ற என் கண் முன்னே தோன்றினாய் !!

உலகிற்கே கண்ணான வேதத்திற்கு ; நடுவேயுள்ள கருவிழி போன்றவன் நீயே !! உனைப் போலே கருணை மழை பொழிய யாராலியலும் ?! கடலைப் போன்றவன் நீ !! உன்னை யார் முழுவதுமாகக் காண இயலும் !! நீர் ( தண்ணீர் ) இவ்வுலகினைக் காப்பது போலே காப்பவன் நீ !! அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் எம் பிழைகளைப் பொறுப்பதில் பூமிக்கு ஒப்பானவன் நீயே !!

உன்னுடைய குணங்களை நாங்கள் ஆராய முற்பட்டால், உன்னைப் போல் ஒருவன் எங்குமில்லை என்கிற முடிவிற்கு வருகிறோம் !!

கைம்மாவுக்கு ( யானை ) அருள் செய்த கார்முகில் போல் வண்ணா !! என் கண்ணா !!

இவ்வடியவன் உன்னைத் துதிக்கின்றேனா , அல்லது பிதற்றுகின்றேனா ?! அதுவும் அறியேன்.. நான் எதுவுமறியேன் !!

கருமணியே !! உன்னை நான் கரிகிரி மேல் கண்டேன்.. கண்டவுடன் என் கடுவினைகள் அனைத்தும் தொலைந்திடக் கண்டேன்..

நானே பாக்கியசாலி.. நானே பாக்கியசாலி என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசலானான் !!

காண்தகு தோளண்ணல் அத்தியூர்க் கண்ணன் ( வரதன் ) சிரித்த படி, அஞ்சல் ( அஞ்சாதே ) என்கிற அபயத் திருக்கரத்துடன் பிரமனை நோக்கி வார்த்தை சொல்லத் தொடங்கினான்..

என்ன சொன்னான் ?!

காத்திருப்போம் !!

 

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version