சுபாஷிதம்: ஒப்பிடக் கூடாதவரோடு ஒப்பிட்டால்?

சுய முன்னேற்றம் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

105. ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால்? 

ஸ்லோகம்:

ஹேம்ன: கேதோ ந தாஹேன ச்சேதேன கஷணேன வா |
இதமேவ மஹத்து:கம் யத் குஜ்ஜாசமதோலனம் ||
– ஜெகன்நாத பண்டிதராயர்

பொருள்:

தங்கத்தின் தூய்மையை அறிவதற்கு பல சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள். நெருப்பிலிடுவார்கள். வெட்டுவார்கள். தேய்ப்பார்கள். ஆனாலும் துயரப்படாது. ஆனால் தங்கத்தை எடை பார்ப்பதற்கு தராசில் குண்டுமணியை வைத்து, ‘ஆகா!  சரியாக உள்ளது’ என்று கூறும் போது தங்கம் பெரும் துயரத்தை அடையும்.

விளக்கம்: 

அடித்தாலும் பரவாயில்லை. திட்டினாலும் பரவாயில்லை. ஆனால் ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டால் எத்தனை ரோஷம் வரும் என்பதை அறிவோம் அல்லவா?

ஜெகநாத பண்டிதராயர் தங்கத்தின் எண்ண ஓட்டத்தை சமத்காரமாக வெளிப்படுத்தியுள்ள ஸ்லோகம் இது.

இவ்விதம் நாம் யாருடனாவது ஒப்பிட்டு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த சுலோகம் சாமர்த்தியமாக விளக்குகிறது.

ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக வளர்ப்பதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் பல தேர்வுகள் வைப்பார்கள். தண்டிப்பார்கள் கூட. அதற்கு ஒன்றும் வருந்த மாட்டான் மாணவன். ஆனால் அவனை ஒப்பிடக்கூடாதவரோடு ஒப்பிட்டு அவமதித்தால்  மிகவும் வருந்துவான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் இருக்கும். அவனுடைய சுய கௌரவத்தை குறைத்துப் பேசக் கூடாது. அவனை பரிகாசம் செய்யக்கூடாது.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பரிகாசத்தையும் அவமதிப்பையும் சகித்துக் கொள்வது கஷ்டம்.  அதனால் யாரையும் பரிகாசம் செய்யாதே என்கிறது இந்த ஸ்லோகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.