திகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது! நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
chidambaram in tihar - 2026

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன நிதி முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை நாடியது அமலாக்கத்துறை!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹார், காலை 8.30 மணிக்குப் பின்னர் திகார் சிறையில், ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்தார். தேவைப்பட்டால் பண மோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19இன் கீழ் சிதம்பரத்தைக் கைது செய்து கொள்ளலாம் என்றும், பொதுவெளியில் கண்ணியக் குறைவாக இல்லாமல் திகார் சிறையில் வைத்து கைது செய்து விசாரிக்கலாம் என்று அனுமதி கொடுக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இணை இயக்குநர் மகேஷ் சர்மா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று காலை திகார் சிறைக்குச் சென்றது. பின்னர் சிறையில் ப.சிதம்பரத்திடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப் பட்டது. விசாரணை முடிவில் அவரை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

chidambaram tihr - 2026

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தில்லி ரோஸ் அவின்யு நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் வைத்து தாங்கள் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அளித்த வாக்குமூலத்தையும் தாங்கள் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம், நாளை ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திஹார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

நாளை மதியம் 3 மணிக்கு ப.சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திஹார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.