நிரவ் மோடி இங்கே இருப்பதை உறுதி செய்ய முடியவில்லை; கைவிரித்த அமெரிக்கா!

இந்தியா உலகம் சற்றுமுன் வணிகம்

வாஷிங்டன்:

நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறார் என்பதை உறுதி செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளது அமெரிக்கா. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி, நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி, அமெரிக்காவில் தான் இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், அவர் அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக செய்திகள் வெளிவருவதை நாங்கள் அறிவோம். ஆனால், அவர் இங்குதான் இருக்கிறார் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான அளவில் கடன் பெற்று, ஏமாற்றி விட்டுச் சென்றுள்ளார் நிரவ் மோடி. இதை அடுத்து அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, வங்கியின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சிபிஐ., யால் கைது செய்யப் பட்டுள்ளனர். இருப்பினும், நிரவ் மோடி இது குறித்து தகவல் வெளியாகும் முன்பே, குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்தியாவில் இருந்து இந்த வருடத் துவக்கத்தில் அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அவர் கரீபியன் தீவுகளில் ஒன்றில் வீடு வாங்கி, பெருமளவில் நிதி முதலீடு செய்து, குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகளில் அவர் நிரந்தரமாக தங்கிவிடக் கூடும் என்று கூறப் படுகிறது.

இதனிடையே, நிரவ் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில், தாம் விசாரணைக்காக நாடு திரும்ப இயலாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந் நிலையில் நிரவ் மோடி அமெரிக்காவில்தான் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க அரசு கைவிரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.