முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு நபர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்க்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
கேரள அரசு தலைமைச் செயலர் டாம் ஜோஸ் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் ஆகஸ்டு 15ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே வெள்ளத்திற்கு காரணம் என்றும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கும் துணைக் குழு நேற்று கூடியதாகவும், நீர்மட்டத்தை 139.99 அடியாக பராமரிக்குமாறு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, முல்லைப் பெரியாறு அணையில், 139.99 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பேரிடர் மேலாண்மை என்ற வரம்புக்குள் நின்றே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், கேரளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டே அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.