வன விலங்கு விரட்டி… செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆர்வம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
vadakarai animals repelled3 - 2026

செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் விவசாயிகளுக்கு வன விலங்கு விரட்டி செயல்விளக்கப் பயிற்சி! வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!

செங்கோட்டை அருகே உள்ள வடகரை கீழ்பிடாகை கிராமத்தில், விளைநிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை விரட்டுவதற்கான செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

vadakarai animals repelled2 - 2026

செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை. இங்கு விவசாயிகள் நெல், தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நீண்ட காலமாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

vadakarai animals repelled1 - 2026

அதன் ஒரு பகுதியாக வேளாண்மைத்துறையின் மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களில் வனவிலங்குகளை விரட்டுவதற்கான தொழில்நுட்பத்தினை விவசாயிகளுக்கு செயல்விளக்கமாக செய்து காட்டிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, செங்கோட்டை அருகே உள்ள வடகரை கீழ்பிடாகை கிராமத்தில் நடந்த செயல் விளக்க பயிற்சியில் நீல்போ” என்ற வனவிலங்கு விரட்டி மருந்தினை பயன்படுத்தி, வன விலங்குகளிடம் இருந்து விவசாயப் பயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் விவசாயிகள் மற்றும் மாணவிளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

vadakarai animals repelled - 2026

இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன், சாகுல் ஹமீது, முகமது இஸ்மாயில், காதர் ஒலி மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவ மாணவிகள் மாலா, கெளரி, பபிதா தேவி, பவித்ரா, சசிகலா, ஸ்ரீமதி, வர்ஷா, சியாமளா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஈசாக் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் மாதிரி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.