crimes scene - 2026

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மதுரை கிரைம் நியூஸ் சற்றுமுன்
crimes scene - 2026

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

சிவகாசி ஐயப்பன் காலனியை சேர்ந்த அச்சகம் மற்றும் அங்காடி நடத்தும் தொழிலதிபர் அரவிந்த் ராம் என்பவர் வீட்டில் கடந்த 5ம் தேதி 75 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை முகமூடி அணிந்தபடி காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துவிட்டு கொள்ளையை தடுக்க முயன்ற அரவிந்த் ராம் மற்றும் அவரது மனைவியை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்துவிட்டு காரில் தப்பியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி அபிணவ்குமார் நேரில் ஆய்வு நடத்தியதை தொடர்ந்து சிவகாசி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் நம்பர் மற்றும் கொள்ளை நடைபெற்ற இடத்தில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் கொள்ளையடித்த நபர்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், கொள்ளையடித்த கும்பல் ஏற்கெனவே பல நாட்களாக சிவகாசியில் முகாமிட்டிருந்ததும், அப்போது அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி கொள்ளை சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்ததாக தூத்துக்குடி ஆசீர்வாதம் நகர் 5வது தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (24), பிரித்திவிராஜன் (28), தூத்துக்குடி அண்ணாநகர் சோமசுந்தரம்(24), தூத்துக்குடி டிஎம்பி காலனி பேச்சிமுத்து (21) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளன.

கொள்ளையர்கள் குறித்து 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.