a v rangachary swami chidambaram - 2026


சிதம்பரம்: பிரபல ஸ்ரீவைணவப் பேரறிஞரும். ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிறந்த கல்வியாளருமான உபய வேதாந்த முனைவர் ஏ.வி. ரங்காச்சாரி ஸ்வாமி (ஏவிஆர் ஸ்வாமி) ஜூலை 2, வியாழன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தினராலும், ஆன்மீக அன்பர்களாலும் “நடமாடும் ராமானுஜர்” என்று போற்றப்பட்ட அவரது மறைவு, ஆன்மீக மற்றும் கல்வி உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. சிதம்பரம் தில்லைத் திருச்சித்திரகூடத்துடன் எண்பது ஆண்டு பந்தம். சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை பகவத் பாகவத கைங்கரியத்திற்காகவே அர்ப்பணித்தவர் . சிதம்பரத்தின் சைவர்களும் வைணவர்களும் ஒருசேர மதித்துப் போற்றிய மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

இளம் வயது அறங்காவலர்

தமது 13வது வயதிலேயே நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களைக் கற்று, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். சிதம்பரம் திவ்யதேசத்தின் உத்ஸவங்களைச் செம்மையாக நடத்துவதில் சிறு வயது முதலே பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இதன் காரணமாக, தனது 18வது வயதிலேயே அறங்காவலர் குழுவில் இணைந்து, மிக இளம் வயதில் இப்பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியவர் ஆனார். பின்னர் இக்கோவிலின் முதன்மை நிர்வாக அறங்காவலராக (Managing Trustee) சிறப்பாகப் பணியாற்றினார்.

இவர் ஆன்மீகத்துடன், அறங்காவலராகவும் பணியாற்றியது மட்டுமின்றி, கல்வித்துறையிலும் முத்திரை பதித்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பொருளாதாரத் துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

பாரம்பரிய ஆன்மீகக் கருத்துகளைத் தற்கால கல்வித் தத்துவத்தோடு இணைத்து வழங்குவதில் வல்லவரான அவர், Managerial Ability of Sri Ramanuja in Retrospection, Ramanuja: A Reality, Not a Myth உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ராமாயண உபந்நியாசங்களும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களை நல்வழிப்படுத்தின. பாரம்பரியக் கல்வி மற்றும் வைணவ நெறிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காகப் புகழ்பெற்ற “ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending