ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் நிறைவு: எஸ்.வி.சேகர், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வற்புறுத்தல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி பொது தகவல்கள் மதுரை

ஸ்ரீவில்லிபுத்தூர்:

தெய்வப் பிறவியான ஆண்டாளை அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் மடத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் துவக்கினார். நேற்று காலை 9 மணிக்கு அவர் மீண்டும் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்.

இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் துவங்கி, இரண்டாவது நாளில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். இன்று காலை அவரைச் சந்தித்த பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா, கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றி மட்டும் அவதூறாகப் பேசவில்லை, திருவள்ளுவர், வள்ளலார், திருமூலர் என நாயன்மார்கள் குறித்தும் தவறான தகவல்களைப் பதிவு செய்துள்ளார். தமித்தாத்தா உ.வே.சா, பாரதி ஆகியோர் குறித்தும் அவர் பொய்ச் செய்தி பரப்பியுள்ளார். மேலும், ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியவை எல்லாம் பொய் என்று அமெரிக்க பல்கலைக்கழகமும், ஆய்வாளர் நாராயணனும் கூறிவிட்டனர். எனவே வைரமுத்து வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பொய்த் தகவல்களைப் பரப்பி வருகிறார் என்பது தெரியவந்துவிட்டது. ஆகவே ஜீயர் சுவாமிகள் உண்ணாவிரதத்தை கை விட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன் என்றார் ஹெச்.ராஜா.

இந்நிலையில் இன்று மதியம் பாஜக., பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஜீயரை சந்தித்துப் பேசினார். அவருடன் மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் வந்திருந்தார். இதை அடுத்து, வேறு வகைகளில் கோரிக்கையை வலியுறுத்தி தீர்வு காணலாம் என்றும், உண்ணாவிரதம் போன்ற உடலை வருத்தும் செயல்கள் வேண்டாம் என்றும் ஜீயரிடம் வேண்டுகோள் முன் வைக்கப் பட்டது. இதை அடுத்து, ஜீயரும் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.