திருச்சி: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியாயின. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரில் சுமார் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வுக்காக தமிழக அரசும் பெரு முயற்சி எடுத்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் கூடியுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்க இயலாமல், செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி அருகே ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் சுபஸ்ரீ. இவர், திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள். கண்ணன், திருச்சி கண்டோன்மெண்ட் கிளை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகவும், அண்ணா தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். சுபஸ்ரீ இந்த வருடம் 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண்கள் எடுத்து திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, அவரால் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்தத் தோல்வியைத் தாங்க இயலாமல் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார் சுபஸ்ரீ. இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், “நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது” என்று கூறினார்.


