வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

Published:

சென்னை:

இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.

இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். மேலும், ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் தனிப்பட்ட கருத்தாகத் தெரிவித்த போது, ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்றார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img