புது தில்லி: அமித் ஷாவுடன், ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். #AmitShah #JPNadda #PrakashJavadekar
கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தது. இதை அடுத்து, கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.
காங்கிரஸ் 77, மதசார்பற்ற ஜனதா தளம் 37 என 114 இடங்கள் வருவதால், கர்நாடகாவில் பாஜக, ஆட்சி அமைப்பதை விரும்பாத காங்கிரஸ் குறுக்கு வழியில் யோசித்து வருகிறது. மஜத.,ஐ விட இரு மடங்குக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட போதும், வேறு வழியின்றி மஜத., வுக்கே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் முகாமிட்டிருக்கும் குலாம் நபி ஆசாத், குமாரசாமியுடன் சோனியா காந்தியின் அறிவுறுத்தலால் பேச்சைத் துவக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதை அடுத்து குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவிப்பதாகவும் கூட்டணி ஆட்சியை தொடரலாம் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், சோனியா காந்தி, தேவகௌடவுடன் பேசியுள்ளார்.
இருப்பினும், ஆட்சியமைக்க தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியை மட்டுமே ஆளுநர் அழைக்க நேரும். எனில், அவர் பாஜக.,வை மட்டுமே முதலில் அழைக்க முடியும். அதன் பின்னரே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, ஆட்சி தொடரமுடியும். ஆனால், அதற்கு முன்னதாகவே பாஜக., வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க காங்கிரஸ் பல வழிகளையும் கையாண்டு வருகிறது.
அதையும் மீறி, காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் அமர பல குறுக்கு வழிகளை கையாளும் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இன்று காலை முடிவுகள் வெளிவரத் தொடங்கிய போது, பாஜக., பெரும்பான்மையைக் காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் வெற்றி வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், முன்னிலை நிலவரத்தில் குறைந்து பாஜக., 106 இடங்களில் முன்னிலை பெற்றது.
இதனால் காலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பாஜக., மதியத்துக்கு மேல் விழிப்பு அடைந்தது. இதை அடுத்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை எப்படியாவது பெறவேண்டும் என்பதற்காக, பாஜக.,வும் காய் நகர்த்தத் துவங்கியது.
இதை அடுத்தே அமித் ஷா திடீரென பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதை அடுத்து, வெற்றிக்கு எப்படியும் 10 இடங்களாவது தேவை என்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் 10 பேரிடம் அமித்ஷா உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, ,பாஜக.வின் இலக்கு மஜத., எம்.எல்.ஏக்களை வளைத்துப் பிடிப்பது என்பதாகத்தான் இருக்கும்!


