
‘மனதின் குரல் (134ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 31.05.2026
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது.
இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப்போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டார்கள், நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ் மீணா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, ஒரு நிகழ்ச்சியானது நாடெங்கிலும் பெரும் விவாதப் பொருளாகிறது என்றால் அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம். வெறும் இரண்டே நாட்களுக்கு உள்ளாக ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலே தேசிய சாதனை மூன்று முறை தகர்க்கப்பட்டது. இதைச் சாதித்துக் காட்டிய இரண்டு வீரர்கள் என்றால் அவர்கள் தாம் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோர். இந்த முறை மனதின் குரலில் இந்த இரு விளையாட்டு வீரர்களோடும் உரையாடிப் பார்ப்போமே என்று நான் நினைத்தேன்.
தொலைபேசி அழைப்பு –
பிரதமர் – அனிமேஷ் ஜி வணக்கம். குரிந்தர்வீர் அவர்களே, உங்களுக்கும் என் வணக்கங்கள், சத்ஸ்ரீஅகால்.
அனிமேஷ், குரிந்தர்வீர் – வணக்கம் சார், வணக்கம்.
பிரதமர் – நல்லதுங்க, நீங்க மிகப்பெரிய சாதனை ஒண்ணை படைச்சிருக்கீங்க. உங்களோட இணை மிக அற்புதமா செயல்பட்டிருக்கு. இசைத்துறையில நாம ஜுகல்பந்தியை கேள்விப்பட்டிருப்போம், ஆனா சவால்ல இப்ப ஜுகல்பந்தியை முதமுறையா பார்க்கறோம். ஒருமுறை ஒருத்தர் ஒரு சவாலை விடுத்து, பிறகு மத்தவர் அந்த சவாலை எதிர்கொள்றாரு. பிறகு மூன்றாவது முறையா இதே மாதிரி. உங்க விஷயம் ரொம்ப சுவாரசியமா இருக்குங்க. மனதின் குரல் நேயர்களுக்கு நீங்க இந்த விஷயம் பத்தி விரிவா விளக்கணும்னு நான் ஆசைப்படறேன். நீங்க செஞ்சிருக்கற சாகஸம் பத்தி எல்லாருக்கும் தெரியணும்.
அனிமேஷ் – வணக்கம் சார். என் பேர் அனிமேஷ் குஜூர். நான் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில தேசிய சாதனையாளர், நான் சத்திஸ்கட்டைச் சேர்ந்தவன் சார். ஆனா இப்ப நான் ஒடிஷாவுக்காக விளையாடிட்டு இருக்கேன். கடந்த ஆண்டு ஆசிய போட்டிகள்ல பதக்கமும், உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்ல பதக்கமும் ஜெயிச்சிருக்கேன். 2021ஆம் ஆண்டு பள்ளியிலேர்ந்து தேர்ச்சி பெற்று வெளியேறினதிலேர்ந்து நான் தடகளப் போட்டிகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சேன். நான் அம்பிகாபூர் சைனிக் பள்ளியில படிச்சு முடிச்சேன். முன்ன எல்லாம் கால்பந்தாட்டம் விளையாடுவேன், எங்கப்பா அம்மாவும்கூட கோவிட் காலத்தில, நீ வெளிய போய் ஓடு இல்லை விளையாடுன்னு எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க. கோவிட் காலம் முடிஞ்ச பிறகு என் கால்பந்தாட்ட நண்பர்கள் சொன்னாங்க, மாநிலப் போட்டி நடக்க இருக்கு, நீ போய் பங்கெடேன்னாங்க, நானும் பங்கெடுத்தேன். ஆனா எனக்கு தெரியாது அதிலேர்ந்து தான் தேசிய அளவுக்கு தேர்வு செய்யறாங்க அப்படீங்கற விஷயம். நானும் தேசிய அளவுக்கு தேர்வு செய்யப்பட்டேன், இன்னைக்கு நான் சர்வதேச அளவுல இந்தியாவோட பிரதிநிதியா இருக்கேன்.
பிரதமர் – ஓ…. சரி குரிந்தர்வீர் அவர்களே, நீங்க எப்படி?
குரிந்தர்வீர் – வணக்கம் சார். என் பேர் குரிந்தர்வீர், நான் இந்தியக் கப்பற்படையில பெட்டி ஆஃபீசரா இருக்கேன். நான் இந்தியாவோட மிக வேகமா ஓடக்கூடிய ஸ்பிரிண்டர், இப்ப நான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில 10.09 விநாடிகள்ல கடந்து தேசிய சாதனையை படைச்சிருக்கேன். 10.1 நொடிகளுக்கு உள்ளார ஓடிக்கடந்த முத இந்தியரும் நான் தான். தடகளமாகட்டும், என் களப்பணி கடற்படையாகட்டும், தேசத்துக்கு சேவை செய்யணுங்கறது தான் என் முயற்சியா இருக்கு. எங்கப்பாவும் சரி, தாத்தாவும் சரி, ரெண்டு பேருமே விளையாட்டுக்கள்ல ஈடுபட்டவங்க, நம்ம இந்தியாவோட கலாச்சாரம் என்னென்னா, எந்த ஒரு பண்டிகையாகட்டும், இப்ப தீபாவளியோ, புத்தாண்டோ எதுவா இருந்தாலும், நாம நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அப்படித்தான் நான் எங்கப்பாவோட பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகளையெல்லாம் சுத்தம் செய்வேன், அப்ப எனக்கு ரொம்ப நல்லா இருக்கும், ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்படி சுத்தம் செய்திட்டு இருக்கும் போது கேட்பேன், இந்தக் கோப்பையை எங்க ஜெயிச்சீங்க, இந்தப் பதக்கத்தை எப்படி ஜெயிச்சீங்க, இந்தப் புகைப்படம் எப்ப எடுக்கப்பட்டிச்சு அப்படீன்னு எல்லாம் கேட்கும் போது அவங்க இது பத்தின விஷயத்தை சொல்லுவாங்க. அதாவது நான் இங்க விளையாடப் போனப்ப தேசிய பதக்கத்தை ஜெயிச்சேன், எங்க அணியை ஜெயிக்க வச்சேன்பாங்க. நானும் உடனே நானும் ஏதாவது விளையாட்டை விளையாடப் போறேன்னு சொல்லுவேன். அவங்க காலையில ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப் போகும் போது, என்னையும் கூட்டிக்கிட்டு போங்கன்னு சொன்னேன். அப்படித்தான் என்னை அவங்க கூட்டிக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க, விளையாட்டுக்களை கத்துக் குடுத்தாங்க. எனக்கு ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சுது. உசேன் போல்டோட உலக சாதனை முறியடிக்கப்பட்டதைப் பார்த்தேன். ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருது. நான் டிவி பார்த்திட்டு இருந்தேன், எங்கம்மா டிவியை அணைச்சுட்டு, தம்பி, படிக்கற நேரமாயிருச்சு, போய் படின்னாங்க. அதுக்கு நான், என்னை இன்னைக்கு நீங்க டிவி பார்க்க விடலை இல்லை, ஒருநாள் இல்லை ஒருநாள் அதோ பாருங்க, குரிந்தர் பந்தயத்தில ஓடிக்கிட்டு இருக்கான் பாருங்கன்னு காமிக்கத்தான் போறீங்க, அப்படியும் ஒரு நாள் வரும்ன்னு சொன்னேன். இன்னைக்கு நான் களத்தில ஓடுறதை எங்கம்மா டிவியில பார்க்கையில எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
பிரதமர் – பிரமாதம், அருமை. ரொம்ப அருமையா சொன்னீங்க.
குரிந்தர்வீர் – ஐயா, நாங்க நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பங்க. எங்கப்பா கைப்பந்து விளையாடுவாரு. வீட்டுல பிரச்சினைகள் காரணமா அவர் விளையாட்டுக்களை விட வேண்டியிருந்திச்சு. அவரோட கனவு கனவாவே நிலைச்சுப் போச்சு. ஆனா தன்னோட கனவை தன்னோட மகன் நிறைவேத்துவான்னு அவரு நம்பினாரு. நான் அவரு கூட பேசும் போது எப்படி மில்கா சிங் எத்தனை கடினமா உழைப்பாருன்னு எல்லாம் சொல்லுவாரு, உங்க கனவை நான் நிறைவேத்துவேன்பான்னு அப்ப நான் சொன்னேன். வாயில சொன்னா மட்டும் கனவை நிறைவேத்திர முடியுமா, அதுக்கு கடினமா உழைக்கணும். மில்கா சிங் அவர்கள் ரத்த வாந்தியெல்லாம் எடுத்தாரு, தீவிரமான வெயில்ல ஓடினாரு. நாள்முழுக்க பயிற்சி எடுப்பாருங்கற விஷயமெல்லாம் எனக்கு கருத்தூக்கமா அமைஞ்சுது. எங்கப்பா எனக்கு உத்வேகம் அளிச்சாரு, அதாவது நான் நாட்டுக்காக ஓடுவேன், நாட்டுக்காக பதக்கங்கள் வாங்குவேன், ஜெயிப்பேன்னு. நான் 100 மீட்டர் பந்தயத்தை தேர்ந்தெடுத்தவுடனே எல்லாரும் சொன்னாங்க, 100 மீட்டரை தேர்ந்தெடுக்காதே, அது இந்தியர்களான நமக்கான போட்டி இல்லைன்னாங்க. இந்தியர்களோட உடம்பு 100 மீட்டருக்கானது கிடையாதுன்னாங்க. குரிந்தர், நாம இதை தேர்ந்தெடுத்திருக்கோம், முன்வச்ச காலை பின்வாங்க கூடாதுன்னு எங்கப்பா எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. நம்மால முடியாதுன்னு யாரு சொல்றாங்களோ, அவங்களுக்கு நாம சாதிச்சுக் காட்டி பதில் சொல்லுவோம். நீ கண்டிப்பா செஞ்சு காட்டுவே, உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கும்பாரு. எங்கப்பா எனக்கு அந்த நம்பிக்கையை அளிச்ச போது, எனக்கு அது ரொம்ப பெரிய தெம்பா இருந்திச்சு, இன்னைக்கு இந்திய ஸ்ப்ரிண்ட் பத்தி எல்லாரும் பேசறாங்க இல்லையா?
பிரதமர் – நீங்க ரெண்டு பேருமே ரொம்ப அருமையா செயல்பட்டிருக்கீங்க, வெறும் ரெண்டே நாட்கள்ல நீங்க ரெண்டு பேரும் மூணு முறை இதற்கு முந்தைய தேசியப் பதிவுகளை தகர்த்திருக்கீங்க. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில ஓடுறது பத்தி சொல்லும் போது, குரிந்தர்வீர் சொன்னா மாதிரி, இந்தியர்களுக்கு இதை ஓட வாகான உடம்பு கிடையாதுன்னு சொல்லுங்க. இத்தனை கடினமானதா இருந்தும் கூட நீங்க சிறப்பா செயல்பட்டீங்க. நானும் சரி, மனதின் குரல் நேயர்களும் சரி உங்ககிட்ட ஒண்ணு கேட்க விரும்பறோம். அதாவது உங்களுக்குள்ள அப்படி என்ன பெரிய தாகம் இருந்திச்சு, என்ன பிடிவாதம் இருந்திச்சு, எதை நினைச்சு உறுதியோட இருந்தீங்கன்னு சொல்லுங்களேன். உங்க சாதனை எத்தனை கடினமா இருந்திச்சு?
குரிந்தர்வீர் – சார், நான் குரிந்தவீர் பேசறேன். தொடக்கத்தில எல்லாம் ரொம்ப போராட்டமா இருந்திச்சு, பலமுறை சந்தேகம் வரும், நான் சரியாத் தான் செய்யறேனா, சரியாத் தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னான்னு எல்லாம். ஏன்னா நீங்க ஒவ்வொரு முறையும் ஜெயிக்கறதில்லை, சில வேளைகள்ல தான் கத்துக்க முடியும். நான் தோல்வியடையும் போது, என்னோட செயல்பாடு சரியா இல்லாத போது, ஏதோ காயம் பட்டிருக்கும் போது, எங்க வீட்டில இருந்தவங்க எனக்கு ஆதரவா இருப்பாங்க, இப்படித் தான் சில நாள் மோசமா இருக்கும், ஏன், ஒரு வருஷம் கூட மோசமா இருக்கலாம், இதனால எல்லாம் ஒண்ணும் பெரிய பாதிப்பு கிடையாது, தைரியமா இரும்பாங்க. ஆனா பாருங்க, கனவு காணுறது மட்டும் தடைப்படாது. உன்னால செய்ய முடியலைன்னா, வேற யாராலயும் செய்ய முடியாதுன்னு என்னோட பயிற்சியாளரும் என்னை ஊக்கப்படுத்துவாரு. நம்மளை சுத்தி இருக்கறவங்க, நம்மைச் சேர்ந்தவங்கன்னு எல்லாரும் நம்மளை ஊக்கப்படுத்தும் போது, நமக்குள்ள இருக்கற தெம்பு என்னைக்கும் தொய்வடையாது.
பிரதமர் – அனிமேஷ் அவர்களே.
அனிமேஷ் – சார், 2021ஆம் ஆண்டுல நான் தடகளத் துறையில நுழைஞ்ச போது. இது புதிய துறை, உன்னால செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கன்னு சொன்னாங்க. இப்ப நான் இதில நுழைஞ்சாச்சு, சாதிச்சே தீருவேன்னு நான் சொன்னேன். எங்கப்பா கூட அடிக்கடி சொல்லுவாரு, நீ இந்தக் களத்தில குதிச்சேன்னு சொன்னா, பின்னால திரும்பிப் பார்க்கவே பார்க்காதே, ஏன்னா இதைச் செய்யணும், அதைச் செய்யணும்னு நினைக்கறவங்க பல பேர் இருக்காங்க, ஆனா செய்து காட்டறவங்க ரொம்ப குறைவானவங்க தாம்பாரு. நீ இதில நுழைஞ்சதால இதிலேர்ந்து பின்வாங்கவே வாங்காதே, இதில முன்னேறுன்னு சொன்னாரு. உனக்குத் தேவையான எல்லா வசதிகளும், எல்லாத்திலயும் நாங்க ஆதரவு தர்றோம், குடும்ப ஒத்துழைப்பு, பண ஆதரவுன்னு எல்லா விஷயங்களையும் நாங்க கவனிச்சுக்கறோம், ஆனா நீ மட்டும் தொடர்ந்து உழைச்சுக்கிட்டே இரு, இந்தியர்களால ஓட முடியும்னு இந்தியர்களுக்குக் காமி, ஏன்னா 10 நொடிகளுக்கு இல்லை 10.1 நொடிகளுக்குள்ளாக இந்தியர்களால ஓட முடியாதுன்னு என்கிட்டயும் சொன்னாங்க. ஆனா இப்ப இந்தியர்களாலயும் முடியும்னு நாங்க நிரூபிச்சிருக்கோம். நமக்கு எந்த ஒண்ணும் கடினமானது இல்லை, நம்மாலயும் செய்ய முடியும். இதெல்லாம் தான் சார் என்னை ஊக்கப்படுத்திச்சு; மேலும்மேலும் நாங்க பயிற்சி மேற்கொண்ட போது, நாங்க பதிவுகளை தகர்த்துக்கிட்டே வந்தோம், நம்மால செய்ய முடியும்னு இந்தியர்களுக்கு நாங்க செஞ்சு காட்டினோம். இப்ப நாங்க காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வு ஆகியிருக்கோம், வரவிருக்கற அந்தப் போட்டிகள்லயும் நாங்க இன்னும் சிறப்பா செயல்பட இருக்கோம்.
பிரதமர் – மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களும் கூட. ஆமா, நீ என் பதிவை முறியடிச்சியா, நான் உன்னோட பதிவை முறியடிக்கறேன் பாருன்னு நீங்க ரெண்டு பேரும் ஏதும் போட்டி போடறீங்களா? முதல்ல அனிமேஷ் நீங்க சொல்லுங்க.
அனிமேஷ் – சர்ஜி, முத பதிவு 10.18 நொடிகளா இருந்திச்சு, அது நான் ஏற்படுத்தின பதிவு தான், அதை குரிந்தர்வீர் அண்ணன், அரையிறுதியில முறியடிச்சு 10.17க்கு கொண்டு வந்தாரு. நானும் விடாம அரையிறுதி இரண்டுல 10.15 விநாடிகள்ல கடந்து முறியடிச்சேன், ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருந்திச்சு. எங்களுக்கு இடையில போட்டித்தன்மை இருக்கும், அது வேற விஷயம். இப்படித்தான் போட்டியில கலந்துக்க ஒருமுறை சவுதி அரேபியா போனப்ப கூட, நாங்க ஒரே அறையில தான் தங்கினோம், அப்பக்கூட நாம எப்படி இந்தியாவோட ஸ்பிரிண்டிங்கை முன்னேத்தறது, மத்தவங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய விஷயமா அதை ஆக்கறதுங்கற வகையில பேசிக்கிட்டோம்.
பிரதமர் – குரிந்தர்வீர் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
குரிந்தர்வீர் – சார், அனிமேஷ் ரொம்ப சரியா சொன்னாரு. நாம சிறப்பா செயல்படணும்னு நாங்க தீர்மானம் செய்திருக்கோம். ஒருத்தரோட உதவி இன்னொருத்தருக்கு எப்பவேணா தேவைப்படலாம். ஆகையால ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தர் இருக்கோம், இப்பகூட முதல்ல நான் பதிவை ஏற்படுத்தினேன், அதுக்கு பிறகு உடனே அனிமேஷ் செய்தாரு. தயாரிப்புல ஈடுபடும் போது நான் அனிமேஷ் கிட்ட சொன்னேன், அனிமேஷ் அந்த ப்ளாக் சரியா இருக்கு, அங்க போய் உட்கார்ந்து அங்க ஸ்ட்ரைட் பண்ணலாம், அங்க தயாரிப்புல ஈடுபடலாம், இது சரியா இருக்கும்னு பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குவோம். இதனால நாமளும் மேம்படுவோம், மத்தவங்களும் மேம்பாடு அடைவாங்க. நட்பும் தேவை தான், ஆனா அதெல்லாம் மைதானத்துக்கு வெளிய. வெளிய நாங்க நல்ல நண்பர்கள். அதே நேரத்தில, களத்தில இறங்கியாச்சுன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாளர்கள். நான் அவரை விட வேகமா ஓடணும்னு ஒருத்தருக்கு ஒருத்தர் நினைச்சு ஓடுவோம்.
பிரதமர் – உங்களோட போட்டி இருக்கே, அது தேசத்தோட கௌரவத்தை அதிகப்படுத்தவும், தேசத்தோட எதிர்காலத்தை இந்த இடத்துக்குக் கொண்டு வரவும் ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வுல செய்யப்பட்டது. உங்களோட இந்த விளையாட்டு உணர்வு இருக்கே, அதில விளையாட்டில ஈடுபடணும், ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போடணும், அடுத்தபடியா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமா இருக்கணும், இது அருமையான விஷயம். உங்களுக்கு என்னோட தரப்பிலேர்ந்து பலப்பல பாராட்டுக்கள், என்ன்னோட பலப்பல நல்வாழ்த்துகள், நீங்க தொடர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்த்துக்கிட்டே இருங்க. இப்படியா தொடர்ந்து கடினமா உழைச்சு நீங்க நிரம்ப முன்னேற்றம் அடைவீங்கன்னு நான் முழுமையா நம்பறேன். பலப்பல நல்வாழ்த்துக்கள்.
குரிந்தர்வீர்/அனிமேஷ் – நன்றி சார்.
பிரதமர் – பலப்பல நன்றிகள்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாட்டின் பல பாகங்களில் தீவிரமான வெப்பம் காணப்படுகிறது. கடுமையான வெப்பம், சூடான காற்று, இதுபோன்ற பருவநிலைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து நீர் பருகி வாருங்கள். வெயிலில் செல்ல வேண்டியிருந்தால், கவனித்துச் செல்லுங்கள். அந்த வகையில் அரசாங்கத்தின் பலவேறு துறைகள் அளித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கத் தவறாதீர்கள்.
நண்பர்களே, நம் நாட்டிலே கோடையின் வெப்பத்தை சமாளிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பலவேளைகளில் சமையலறையில் கிடைக்கிறது. எப்போதெல்லாம் வெப்பம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் வீட்டின் சமையலின் சுவையும் மாறிப் போகிறது, சமைக்கும் விதமும் மாறி விடுகிறது. பானையில் தண்ணீர் இடம் பெறத் தொடங்குகிறது, தயிரின் பயன்பாடு அதிகரிக்கிறது, மாங்காய் நீரில் கொதிக்க ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன, உள்நாட்டு பானம் தயாராகிறது. நம் நாட்டின் பானங்கள் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், வட பாரதம் சென்றால், பல இடங்களில் ஆம் பன்னா கிடைக்கும், இதன் மாங்காய் சுவையோடு கூடவே, வெப்பத்திலிருந்தும் விடுப்பு கிடைக்கிறது. பஞ்சாப் ஹரியாணா பகுதிகளிலோ லஸ்ஸி பானம் கிடைக்கும், பெரிய கோப்பையில் கிடைக்கும் லஸ்ஸி. ராஜஸ்தான் குஜராத்திலோ மோர், இது ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இணைபிரியாத ஒன்றாக ஆகி விடுகிறது. மேலும் பிஹார், ஜார்க்கண்ட், வடகிழக்கு பகுதிகளில் சத்தூ ஷர்பத், அருமையாக சுவை கூட்டவல்லது. வயிறும் நிறையும், பலமும் அதிகரிக்கும். கோங்கண், கோவா பகுதிகளில் கோகம் ஷர்பத், ஸோல் கடீ கிடைக்கும். தென்பாரதத்தில், பானகம், நீர்மோர், சம்பாரம் போன்றவையும், ஒடிஷாவிலே பேல் பனா கிடைக்கும். இது வெறும் பானம் அல்ல, பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரியத்தின் அங்கம். மேலும் இதிலே ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் பிரதிபலிப்பு காணப்படும். இன்னும் ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள், இவற்றிலே அதிகபட்சம் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே கிடைக்கின்றன, நமது வயல்வெளிகளில் விளைகின்றன. எந்த ஒரு பெரிய ப்ராண்டிங் எல்லாம் கிடையாது. ஆனால் தலைமுறைதலைமுறைகளாக கிடைத்த அனுபவம் அவற்றிலே கலந்திருக்கிறது. நீங்களும் கோடையின் வெப்பத்தின் போது உள்நாட்டு பானங்களைப் பருகி ஆனந்தம் அடையுங்கள்.
நண்பர்களே, கோடை வரும் போதே, மேலும் ஒரு விவாதம் ஒவ்வொரு வீட்டிலும் தொடங்கி விடுகிறது, அது தான் மாங்காய். மாங்காய்-மாம்பழம் தான் விவாதப் பொருள், கோடையில் மாங்காய் பற்றிப் பேசாத வீடு பாரதத்திலே இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான மா ரகம், அதன் பிரத்யேக சுவை, மணம் ஆகியன. மகாராஷ்டிரம் மற்றும் கோங்கணில் ஹாபுஸ், அல்ஃபோன்ஸோ, குஜராத்தின் கேஸர், இது தான் மாம்பழ ரசத்தின் உயிர்நாடி. உத்தர பிரதேசத்தின் தஸ்ஹரியும், என்னுடைய காசியின் லங்க்டாவும். பொதுவாக இந்த லங்க்டாவின் சிறப்பம்சம் என்னவென்றால், பழுத்த பிறகும் இது பலவேளைகளில் பச்சையாகவே இருக்கும். பிஹாரின் ஜர்தாலு, தொலைவிலேயே இதன் மணம் இதன் அடையாளமாக ஆகி விடுகிறது. சௌஸா, மால்தா என்ற பெயர்களோடு மக்களின் நினைவுகள் கலந்திருக்கின்றன. தென் பாரதத்தின் பங்கனபல்லி, தோதாபுரி, நீலம், மல்கோவா, வங்காளத்தின் ஹிம்சாகர், ஒடிஷா மற்றும் ஆந்திரத்தின் சுவர்ணரேகா. அதாவது, இடம் மட்டும் மாறவில்லை, அதோடு கூடவே மாம்பழத்தின் வடிவமும் வண்ணமும் சுவையும் கூட மாறி விடுகிறது.
மேலும் நண்பர்களே மாம்பழத்தின் இந்தப் பயணம், இப்போது கிராமம் தொடங்கி, உலகளாவிய சந்தைகள் வரை தொடர்கிறது. இன்று மனதின் குரல் வாயிலாக நான் மாம்பழ சாகுபடியோடு தொடர்புடைய விவசாய சகோதர சகோதரிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன். நீங்கள் தேசத்தின் விவசாயப் பொருளாதாரத்திற்கு உதவும் மாம்பழ சாகுபடியாளர்கள் மட்டுமல்ல, சிறப்பான விவசாயிகளும் கூட. இதே போல தொடர்ந்து கோலோச்சுங்கள்.
நண்பர்களே, கோடைநாட்களிலே, பள்ளிக்கூட விடுமுறை தான் என்றாலும், நான் பேசவிருக்கும் ஒரு வகுப்பிலே நீங்களும் சேர வேண்டும் என்று உங்கள் மனமும் ஆசை கொள்ளும். நண்பர்களே, இப்படி ஒரு பள்ளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அதிலே குழந்தைகளும் வருகிறார்கள், இளைஞர்களும் வருகிறார்கள், முதியவர்களும் வருகிறார்கள். அங்கே கட்டணம் ஏதும் கிடையாது, பெரிய கட்டடம் ஏதும் இல்லை, வகுப்பறைகள் ஒன்றும் கிடையாது, ஆனால் சுவாரசியமான விஷயமே அங்கே வகுப்பு நதியிலே தான் நடக்கும்.
நண்பர்களே, இது ஏதோ கட்டுக்கதையல்ல. இது ஒரு மெய்யான முயற்சி. கேரளத்தின் அலுவாவிலே, சாஜீ வலாஷேரில் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு நீச்சல் கிளப்பை நடத்தி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 15,000த்துக்கும் அதிகமானோர் இங்கே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். சாஜீ அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சியின் பின்னணியிலே ஒரு வலியும் மறைந்திருக்கிறது. சில ஆண்டுகள் முன்பாகத் தான், ஒரு படகு விபத்தில் பல மாணவர்களின் இறப்பு சம்பவித்தது. இந்தச் சம்பவம் சாஜீயை உலுக்கிப் போட்டது. அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் நீச்சல் தெரிந்திருந்தால், அவர்கள் ஒருவேளை தப்பியிருப்பார்கள் இல்லையா என்று அவர் நினைத்தார். இது தான் அவருடைய இந்த இயக்கத்தின் தொடக்கமானது.
நண்பர்களே சாஜி வலாஷெரில் அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பெரிய கற்றலை அளிக்கிறது. சேவை செய்ய பெரியபெரிய சாதனங்களோ கருவிகளோ தேவையில்லை; தேவை ஒரு நல்ல நோக்கம், தொடர்ந்து சேவையாற்றும் முயற்சி. இவற்றின் துணையோடு, ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்த முடியும்.
என் அன்புநிறை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் நான் ஐரோப்பாவின் நெதர்லாண்டு நாட்டுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே பல கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அப்போது ஒரு கணம் அனைத்து பாரதநாட்டவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது. நெதர்லாண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவிலே சோழர்கள் காலத் தொன்மையான தாமிரப் பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலே நெதர்லாண்டின் பிரதம மந்திரியும் உடன் இருந்தார். இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து எனக்குத் தொடர்ந்து செய்திகள் கிடைத்து வருகின்றன. மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள், பெருமிதத்தைத் தெரிவித்து வருகிறார்கள். உலகெங்கிலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் இதனால் சிறப்பான உற்சாகம் பெருக்கெடுத்திருக்கிறது.
நண்பர்களே, இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் நிறைய ஆவல் இருக்கிறது. ஆகையால் இதோடு தொடர்புடைய சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இவற்றிலே 21 பெரிய மற்றும் 3 சிறிய பட்டயங்கள் இருக்கின்றன. இவை முக்கியமாக பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழன் வாயிலாக அவருடைய தந்தையார் பேரரசர் ராஜராஜ சோழன் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தல் தொடர்பானது. ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை ஒரு புத்த விஹாரம் அமைக்க தானமாக அளிப்பது பற்றி இதிலே குறிப்பு இருக்கிறது. இந்தத் தாமிரப் பட்டயங்களிலே சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல்வல்லமை எத்தனை மகத்தானதாக விளங்கியது என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு அவர்களுக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிய தகவல்களும் இவற்றிலே காணக் கிடைக்கின்றன.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளமான வரலாறும், கலாச்சாரமும் தொடர்பாக நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.
நண்பர்களே, நமது அரசாங்கம் பாரதத்தின் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்தத் தொடரிலே, ஞான பாரதம் இயக்கத்திற்குட்பட்டு, சத்திஸ்கட்டின் மல்ஹாரிலும் கூட ஒரு மகத்துவம் வாய்ந்த தேடல் நடந்திருக்கிறது. இங்கே மூன்று அபூர்வமான தாமிரப் பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன. இவை பாண்டுவம்ச அரசகுடும்பத்தின் மஹர்ஷி பாலார்ஜுனரின் ஆட்சிக்காலத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த எழுத்துப்பொறிப்புகள், 6-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, அதாவது 1400-1500 ஆண்டுகள் பழமையான இந்த தாமிரப் பட்டயங்கள், பண்டைய பிராம்மி எழுத்துக்கள் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றிலே அந்தக் காலகட்டத்தின் ஆட்சிமுறை, அறம் மற்றும் கலாச்சாரம் பற்றிய மகத்துவமான தகவல்கள் கிடைக்கின்றன.
நண்பர்களே, பாரத நாட்டவர்களான நமக்கு வானியல் தொடர்பாக எப்போதுமே ஈர்ப்பும் ஆர்வமும் இருந்து வந்திருக்கிறது. நமது தேசத்திலே இன்றும்கூட பல நூற்றாண்டுக்காலப் பழமையான வானாய்வகங்கள் இருக்கின்றன. இங்கே அற்புதமான கணிதக் கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன. கடலோடல்-வானோடலாகட்டும், பஞ்சாங்கமாகட்டும், அல்லது நமது திருநாட்கள்-பண்டிகைகளாகட்டும், இவை அனைத்தும் வானத்தோடும், விண்மீன்களோடும் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன. நம் நாட்டிலே வானியலானது ஒவ்வொரு தலைமுறையின் ஆர்வத்தையும் தொடர்ந்து தூண்டி வந்திருக்கிறது. ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியிருக்கிறது, இன்றைய இளைஞர்களும் கூட இது தொடர்பாக கணிசமான பேரார்வத்தோடு இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நாடெங்கிலும் வானியல் குழுக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம். பெரியபெரிய நகரங்கள் தொடங்கி, சிறிய வசிப்பிடங்கள் வரை, பள்ளிகள் முதல் பூங்காக்கள் வரை இந்தச் செயல்பாடுகளைக் காண முடிகிறது. பெங்களூர் வானியல் சங்கம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இங்கே கண்காணிப்பு சார்ந்த அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அமைப்பிலே ஊரகப் பகுதிகளிலே வானியலை மக்களுக்கு விருப்பப்பொருளாக ஆக்கும் இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது. ககோல் மண்டல், அதாவது வானியல் சங்கம் என்ற பெயர் கொண்ட ஒரு குழுவானது 30 மணிநேர அளவிலான மிகவும் புதுமையான படிப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.
நண்பர்களே, இரவின் விண்மீன்களை ரசிப்பது என்பது உள்ளபடியே மிகவும் அற்புதமான அனுபவம். ஆஸ்ட்ரோ கேரளா என்ற பெயருடைய அமைப்பு ஒன்று, இரவுக் கண்காணிப்பு முகாம்களுக்கும் கருத்துப் பட்டறைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. இங்கே இளைஞர்கள் தொலைநோக்கிக் கருவியைத் தயாரிப்பது, நட்சத்திரங்களின் வரைபடங்களைப் பயன்படுத்துவது ஆகியவை பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். ராஜ்கோட்டின் பிக்பேங்க் வானியல் சங்கமானது, கிர் காடுகள் முதல் கட்சின் ரண் வரை பல வானியல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஜோதிர்வித்யா பரிசம்ஸ்தாவும் கூட வானியலின் மிகவும் பழமையான அமைப்புகளில் ஒன்று. இங்கே கண்காணிப்பு வசதிகளுடன் கூடவே, புத்தகங்கள், நூலகம் மற்றும் தொலைநோக்கு நூலக வசதிகளும் இருக்கின்றன. நான் ISAAC ஐசாக் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். இது மாணவர்களால் வழிநடத்தப்படும் தேச அளவிலான வலையமைப்பு. இது வானியல் மற்றும் வானியற்பியல் சங்கங்களை பரஸ்பரம் இணைக்கிறது.
நண்பர்களே, நம்முடைய பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதும், தொடர்ந்து ஏதேனும் புதியதாகக் கற்றுக் கொண்டே இருப்பதும் மிகவும் அவசியமானவை. ஏதோ ஒரு வானியல் சங்கத்தோடு கண்டிப்பாகத் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும், இந்த விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு கோளரங்கத்திற்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரல் நிகழ்ச்சியை யாரெல்லாம் தொலைக்காட்சியில் பார்க்கிறார்களோ, அவர்களிடம் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு காணொளியைக் கண்டிப்பாகப் பாருங்கள். இந்தக் காணொளி கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகியிருக்கிறது. இதிலே சிலர் மிகவும் பொறுமையாக, மிகவும் நிதானத்தோடு ஒரு கங்கைப்பகுதி டால்ஃபினைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மொத்த முயற்சியிலும் சுமார் 13 மணி நேரம் செலவாகி, நிறைவாக அந்த டால்ஃபின் தப்பியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.
நண்பர்களே, பாரதத்தின் முதலாவது கங்கைப்பகுதி டால்ஃபின் மீட்பு அவசரகால வாகனத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இதில் அடங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்தது. அங்கே ஒரு கங்கைப்பகுதி டால்ஃபின் ஒரு கால்வாயிலே சிக்கிக் கொண்டது. இந்த வேளையில் நமாமி கங்கே இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அதற்கு நம்பிக்கைக் கீற்றாக விளங்கியது. மிகவும் கவனமாக அதை வெளியே எடுத்தது. பிறகு அது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அது பாதுகாப்பாக ராப்தி நதியில் விடப்பட்டது. ஒரு வகையில் சொல்லப்போனால், ஒரு உயிர் மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது என்று கூறலாம்.
நண்பர்களே, இந்த டால்ஃபின் மீட்பு ஆம்புலன்ஸ் மிகவும் சிறப்பானது. இதை ஒரு நடமாடும் மருத்துவமனையைப் போல வடிவமைத்திருக்கிறார்கள். இதிலே டால்ஃபினுக்குத் தேவையான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன. பிராணவாயு வசதி, சிறப்பான ஸ்ட்ரெச்சர், மீட்பு உபகரணங்கள், அதாவது ஏதாவது டால்ஃபின், காயமடைந்து கால்வாயில் சிக்கிக் கொண்டாலோ, நதியிலிருந்து விலகிப் போயிருந்தாலோ, உடனடியாக அதற்கு உதவி செய்யப்படும்.
நண்பர்களே, நாம் கங்கைப்பகுதி டால்ஃபின்களைக் காப்பாற்றும் போது, நாம் ஏதோ ஒரு உயிரினத்தை மட்டும் காப்பாற்றவில்லை, நாம் கங்கையின் உயிரி பன்முகத்தன்மையையே காப்பாற்றுகிறோம். நதியின் ஒட்டுமொத்த உயிர்ப்பு இயந்திரத்தைக் காப்பாற்றுகிறோம், நமக்குப் பின்னால் வரும் தலைமுறையினருக்கு இயற்கையின் விலைமதிப்பில்லா ஒரு மரபினைக் காப்பாற்றித் தருகிறோம்.
எனதருமை நாட்டுமக்களே, உங்களில் பலருக்கு நதி, குளம் அல்லது ஏரிகளோடு தொடர்புடைய நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். யாருக்காவது குளத்தில் நீந்தியது, யாருக்காவது ஏரிக்கரையில் நண்பர்களோடு விளையாடியது, யாருக்காவது அந்த மண்ணின் மணம் நினைவில் இருக்கலாம். சிறுவயதின் இப்படிப்பட்ட நினைவலைகள் வாழ்க்கை முழுவதும் நம் மனங்களிலேயே நீக்கமறத் தங்கி விடுகின்றன.
நண்பர்களே, இப்படிப்பட்ட நினைவலைகளைப் பராமரிக்க உள்ளெழுச்சியளிக்கவல்ல காதைகள் உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலிருந்து காணக் கிடைக்கிறது. பஸ்தியின் ஆகாஷ் குப்தா அவர்கள் தன்னுடைய கிராமத்தின் மனோரமா நதியைக் கண்டு மிகவும் துயரமடைந்தார். ஏனென்றால் எந்த நதியை அவர் சிறுவயதிலே தூய்மையானதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் கண்டாரோ, காலப்போக்கிலே அந்த நதியிலே நெகிழிகள் திரண்டு, மாசு அதிகரிக்கத் தொடங்கியது. யாரையும் குற்றம்குறை கூறுவதாயில்லை, தானே ஒரு புதிய தொடக்கத்தைப் புரிவதாய் ஆகாஷ் அவர்கள் தீர்மானம் மேற்கொண்டார். குற்றம் சொல்லோம், தொடக்கம் செய்வோம் என்பது மந்திரச் சொற்களாயின. தனது நண்பர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டார். கைகளிலே வெறும் வலை இருந்தது, மண்வெட்டி இருந்தது, பாண்டு இருந்தது, அனைத்தையும் விட மேலான சக்தியாக, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. இந்த இளைஞர்கள் நதியில் இறங்கினார்கள், ஆகாயத்தாமரைகளை வெளியேற்றினார்கள், நெகிழிகளையும், குப்பைகளையும் அகற்றினார்கள். பல வேளைகளில் ஒரே நாளில் 50-60 கிலோ வரையிலான குப்பைகளை நதியிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். மெல்லமெல்ல மனோரமா நதியின் அந்தப் பகுதி மீண்டும் தூய்மையாகக் காட்சியளிக்கத் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருப்போரின் கவனமும் இந்தப் பணியின்பால் திரும்பியது. மக்கள் மனங்களிலும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது.
நண்பர்களே, இதே போன்றதொரு உத்வேகமளிக்கும் சம்பவம் கோவாவிலே தெரிய வந்திருக்கிறது. கோவாவின் பாலகிருஷ்ண ஐயா அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர். ஆனால் சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய உற்சாகம் இன்றும் பசுமையாக இருக்கிறது. மட்டீ-தோலாப் பகுதியிலே நீர்த்தட்டுப்பாடு பலரையும் வதைத்துக் கொண்டிருந்தது. தீர்வு நோக்கி இவரும் பணியாற்றி வந்தார். பாலகிருஷ்ணா அவர்கள், குழாய்களைப் பொருத்தும் பணியில் மகத்துவமான பங்காற்றினார். இதனால் பல இல்லங்களுக்குக் குடிநீர் கிடைக்க முடிந்தது. எந்தக் குடும்பங்கள், குடிநீருக்காக தினமும் போராட வேண்டியிருந்ததோ, அவர்களுக்குப் பெரும் ஆசுவாசம் பிறந்தது.
நண்பர்களே, கடந்த மாதங்களில் ஒரு மிகப்பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. இது மனதின் குரலோடும் கூட தொடர்புடையது. ஆகையால் இன்று நான் இதுபற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டின் நாகர்கோயிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். அந்தச் சந்திப்பின் போது, இளைய மாணவர்களும் அவருடன் இருந்தார்கள்.
நண்பர்களே, கிரிஜா அம்மா அவர்கள் சுமார் 15 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். இவற்றிலே சென்னையின் ஜய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மிகவும் முக்கியமானது. இவருடைய தேசபக்தி உணர்வு, அனைத்து பாரதவாசிகளுக்கும் கருத்தூக்கமளிக்கவல்லது. இவர் மனதின் குரலால் உள்ளெழுச்சி பெற்று, தேசத்தின் பல இராணுவ வீரர்களுக்கு பங்களிப்பு அளிக்கும் உறுதி பூண்டார். இதன் பொருட்டு இவர் தனது அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளித்தார். வீரம் நிறைந்த படைவீரர்களுக்கு நாம் ஒவ்வோர் தினமும் ஒரு ரூபாய் பணத்தைப் பங்களிப்பாக அளித்துவர வேண்டும் என்று மாணவர்களிடம் இவர் கூறினார். அதாவது ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவன் தரப்பிலிருந்தும் 365 ரூபாய் திரட்டப்படும். இந்தச் சின்னச்சின்னப் பங்களிப்பால் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேர்ந்தது. கிரிஜா அம்மா அவர்கள் இந்த மொத்தப் பணத்துக்கான காசோலையை என்னிடத்தில் அளித்தார். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, பாரத அன்னையிடம் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு உணர்வு எத்தனை ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது. கடந்த ஆண்டு தான் சென்னையின் முதல் ஹிந்து வித்யாலயமானது தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது. தேசத்தின் கல்வி மற்றும் கலாச்சார கௌரவத்தை முன்னெடுத்துச் செல்லும் பள்ளி வலையமைப்பு தொடர்பான இவருடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நம்முடைய படைவீரர்களூக்குத் தங்களுடைய பங்களிப்பை அளித்த அந்த மாணவச் செல்வங்களுக்கும் நான் குறிப்பாக என் பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
நண்பர்களே, பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரிலும், ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அது நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது. பல வேளைகளில், இந்த முயற்சிகள் அதிக பேசுபொருளாவதில்லை என்றாலும், அதைப் பற்றி நாம் அறியும் போது, தேசம் தனது குடிமக்களின் சக்தியின் துணையோடு முன்னேறி வருகிறது என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது. உங்கள் அருகிலே இப்படிப்பட்ட முயற்சிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். யார் சமூகத்திற்காக நல்ல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், முடிந்தால் நீங்களுமே கூட ஏதோ ஒரு நல்ல பணியிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாத மனதின் குரலில் மேலும் சில உள்ளெழுச்சியளிக்கும் விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.




