உ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை

50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் உள்ளிட்டவை மீதான தடை இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது தடை விதித்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட்டு, 50 மைக்ரானுக்கும் கீழான பிளாஸ்டிக் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் வரை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் புகை பிடித்தல், குட்கா பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதுபோல சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது பைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும், 50 மைக்ரானுக்கு மேலான பிளாஸ்டிக் வைத்திருக்கும் கடைகள் அதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அப்பகுதி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து உரிய நேரத்தில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மஹராஷ்ரிடா, தெலங்கானா மற்றும் தமிழக அரசுகள் பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.