வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு!

புதுதில்லி: சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்! அவரது உடல் நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந் நிலையில் இன்று மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓரளவு சீரான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஜ்பாய் உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் தகவல்களை தொடர்ந்து கேட்டுப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை, பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்  சந்தித்து உடல்நலம் விசாரித்தறிந்தனர்.