வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது: அருண் ஜெட்லி

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அருண் ஜெட்லியால் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.21,47,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. பட்ஜெட் அறிவிப்பின் பின்னர் பேசிய அருண் ஜெட்லி இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ”இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக ’SANKALP’ (Skill Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion Programme) என்ற திட்டம் ரூ.4,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டிலுள்ள சுமார் 3.5 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
தற்போது நாட்டில் 60 மாவட்டங்களில் ‘பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா’ என்ற திறன் மேம்பாட்டு மையங்கள் இருக்கின்றன. அதிவிரைவில் 600 மாவட்டங்களில் இந்த மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், நாடு முழுவதும் சுமார் 100 சர்வதேச திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் அந்நிய மொழிகளில் சிறப்பான முறையில் பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.