நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

Published:

சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் மேற்கொண்ட முடிவினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நாளை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், அவைத்தலைவர் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இந்த மனுவை நாளை ( 22 ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

தி.மு.க., செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்கு பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சசிகலா, சட்டசபை, அ.தி.மு.க., தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம், ராஜினாமா செய்தார். பின் அவர், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக, பகிரங்கமாக புகார் தெரிவித்தார். ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கவர்னரிடம் சசிகலா உரிமை கோரினார். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்பட்டது.அதனால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, பழனிசாமியை தேர்ந்தெடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. முதல்வராக, பிப்., 16ல், பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, அவகாசம் வழங்கப்பட்டது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

ஆனால், 18ம் தேதியே, சட்டசபையின் சிறப்பு கூட்டம்,காலை, 11:௦௦ மணிக்கு துவங்கியது. சென்னை, காமராஜர் சாலையில், என் கார் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. இதனால், சட்டசபையை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டசபை துவங்கியதும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும், பன்னீர்செல்வமும் கோரிக்கை விடுத்தனர்.

‘எம்.எல்.ஏ.,க்களை சட்டவிரோத காவலில் வைத்ததால், அவர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டும் என்றால் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றே வழி’ என, வலியுறுத்தப்பட்டது; அதை, சபாநாயகர் மறுத்தார். சட்டசபையை, பிற்பகல், 1:00 மணிக்கு தள்ளி வைத்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கும் வகையில், போலீஸ் படையினர் அங்கு வந்தனர். பகல், 1:00 மணிக்கு சட்டசபை துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர்களை வெளியே அனுப்பும்படி, சபை காவலர்கள் மற்றும் சபை காவலர்கள் சீருடையில் இருந்த போலீசாருக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின், சபையை, 3:00 மணிக்கு தள்ளிவைத்தார். சபாநாயகரின் உத்தரவை சாதகமாக எடுத்து, கூடுதல் போலீஸ் ஆணையர் சேஷசாயி தலைமையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் தாக்கினர். அப்போது, சபையில் சபாநாயகர் இல்லை.சபை விதிகளை பின்பற்றாமல், என்னையும் வெளியேற்றினர். போலீசார், முரட்டுத்தனமாக அணுகினர்; என் சட்டை கிழிக்கப்பட்டது. கடைசியில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றினர். சபாநாயகர் செயல்பட்டதை கண்டித்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல், முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. முதல்வருக்கு ஆதரவாக, 122 ஓட்டுகளும், எதிராக, 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு, சட்டவிரோதமானது; சபை விதிகளை மீறியது.
எனவே, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்; முதல்வர் என்ற முறையில் கொள்கை முடிவெடுக்க, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். கவர்னரின் செயலர், தலைமை செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் மீண்டும் ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்; சபாநாயகரின் முடிவு செல்லாது என உத்தரவிட வேண்டும்.

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை, தாற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், ‘மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்’ என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img