சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மாயமான விவகாரம்: பேராசிரியர் உள்பட 6 பேர் கைது

  சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு துறை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 16–ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஆய்வு செய்தபோது எம்.எஸ்.சி. கணித பாடத்தின் 1,111 விடைத்தாள்கள் மாயமானது தெரியவந்தது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி தலைமையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி, அண்ணாமலை நகர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தொலை தூரக் கல்வி இயக்கக வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் பாஸ்கர் (வயது35), தேர்வுத் துறை உதவியாளர்கள் ராமசாமி (32), சங்கர் (41), கார்த்திகேயன் (30), ஆனந்த் (33), நூல் வெளியீட்டுத் துறையைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் மாரிமுத்து (33) ஆகிய 6 பேரும் விடைத்தாள்களை கள்ளச்சாவி மூலம் பல்கலைக்கழக பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்தது தெரியவந்தது. மாயமான விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். விடைத்தாள் மாயமான விவகாரத்டில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.