இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக கடல் பகுதியில் சுமார் 158 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல் படையினர் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே இலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இந்திய கடல் பகுதியில் விசைப் படகு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர், அந்தப் படகில் இருந்த மீனவர்கள் 6 பேரைக் கைது செய்தனர். படகைப் பறிமுதல் செய்து, சென்னைக்குக் கொண்டு வந்து, சென்னை துறைமுக காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.