தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர்களுக்கான விருதுகளுக்கு சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட இசை, கிராமிய நடனக் கலைஞர்கள் மே 30 -க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் கலைப் பண்புகளை மேம்படுத்தும், பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, 18 வயதுக்கு உள்பட்டோருக்கு “கலை இளமணி’ விருதும், 19 முதல் 35 வயதுக்கு உள்பட்டோருக்கு “கலை வளர்மணி’ விருதும், 36 முதல் 50 வயதுக்கு உள்பட்டோருக்கு “கலை சுடர்மணி’ விருதும், 51 முதல் 60 வயதுக்கு உள்பட்டோருக்கு “கலை நன்மணி’ விருதும், 61 வயதுக்கு மேற்பட்டோருக்கு “கலை முதுமணி’ விருதும் வழங்கப்பட உள்ளது.
தகுதி: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடக கலைஞர்கள், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் இசைக் கலைஞர்களும், கரகம், காவடி, பொய்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், தெருகூத்து ஆகிய கிராமியக் கலைஞர்களும் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.