திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை தந்துள்ளார்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிக்க அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், நடிகர் ரஜினி காந்தும் நேற்று வந்திருந்தனர்.
கருணாநிதியை அவர் நேரில் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
நேற்று இரவு 8.45 மணியளவில் சென்ற, நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மலை பிரதேசங்களில் நடைபெற்றது. பின்னர் சென்னை வந்த ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 15 நிமிடங்கள் காவிரி மருத்துவமனைக்குள் நேரம் செலவிட்ட ரஜினிகாந்த், பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ரஜினிகாந்த் கூறியதாவது: இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தேன். அவர், தூங்கிக்கொண்டிருந்தார். அண்ணன் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, கனிமொழி, செல்வம் எல்லோரும் அங்கே இருந்தனர். அவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும். கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.