பழனியில் தாய்க்கு திதி கொடுக்க விடுமுறை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய உதவி பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் தனபாலன் (வயது 57) . இவர் பழனி ரெயில்வேபீடர் சாலையில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மின்விசிறியில் தனபாலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பாரத்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனபாலனின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தினர். அப்போது தனபாலின் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தனபால் கூறியிருந்ததாவது:-
‘அன்புள்ள ‘அம்மா’ நான் உங்களுடைய இறந்த நாளான நாளை (அதாவது இன்று) சொந்த ஊரில் இருந்திருக்க வேண்டும். நீங்கள் இறந்து ஓராண்டு முடிந்த பின்பு கொடுக்க வேண்டிய திதியை கூட கொடுக்க இயலாதவனாக இருக்கிறேன். எனது மேல் அதிகாரி, லீவு நாளில் கூட உங்களுக்கு திதி கொடுக்க விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கவில்லை.
இதனால், இந்த துயர முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். நான் இறந்தாலும் எனது குடும்பத்தினர் அடுத்தவர்களை பகைத்துக் கொள்ளாமலும், கடன் வாங்காமலும், கொடுக்காமலும் வாழ வேண்டும். நான் இறந்ததும் எனக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்குகளையும் என் குடும்பத்தினர் செய்ய வேண்டும். நான் என்றும் எனது அம்மாவின் பிள்ளையாக இருப்பேன். அப்பிராணிகள் தான் எப்போதும் தண்டிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
எனவே, அவர் விடுமுறை கிடைக்காத விரக்தியில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து பழனி நகர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு திதி கொடுப்பதற்கு விடுமுறை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய உதவி பொறியாளர் தற்கொலை செய்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

