மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு வேத மந்திரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில்,
யாக சாலையிலிருந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் மேளதாளங்கள் முழங்க கோவில் விமானம் நோக்கி புறப்பாடு ஆகியது .
தொடர்ந்து திட்டமிட்டபடி, காலை 9.57 மணி முதல் 10.17 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மேளதாளங்கள் முழங்க வேதியர்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. மூலவர் , கோதண்ட ராமர் சுவாமி, விநாயகர், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், கிருஷ்ணர் மற்றும் நவக்கிரக தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் மீது யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். திரளான பொதுமக்களின் பங்கேற்பால் விழா ஆன்மீக எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.



