தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்தது. இதனால், சென்னை மாநகருக்கு மீண்டும் பலத்த மழை ஆபத்து ஏற்படும் என்ற சூழலில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்தது.
இப்போது வங்கக் கடலில் இருந்து அரபிக் கடல் நோக்கி காற்றில் மேகங்கள் இழுத்துச் செல்லப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.