தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாஇன்று தொடங்கி வரும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
குச்சனூர், சுரபி நதிக் கரையில் சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனீஸ்வர பகவான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடிப் பெருந்திருவிழா நாளை ஆடி முதல் சனிக்கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 27 ஆம் தேதி 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சள் காப்பு சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு சுவாமி திருவீதி உலா, ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை லாடசித்தர் பூஜை, முளைப்பாரி ஊர்வலம், கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி 4ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு சோனை கருப்பணசாமிக்கு பொங்கல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். ஆகஸ்ட் 17ஆம் தேதி 5 ஆவது சனிக்கிழமை கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைகிறது.