காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

சென்னை:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 40 மி.மீ. மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், கீரனூரில் 30 மி.மீ, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் நந்தம், அரியலூர் மாவட்டம் திருமனூர், வேலூர் மாவட்டம் ஆலங்கயம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் ஆகிய இடங்களில் 20 மி.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்கல்பட்டு, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருச்சியில் 10 மி.மீ. மழையும் பதிவானது.
இந்த நிலையில் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கக் கடற்பகுதியில் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறலாம். இதனால், தமிழகம் – புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலைமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.