திரிஷா பீடாவில் இல்லை; இனி அருகேகூட நெருங்க மாட்டோம்: அம்மா உமா உறுதி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

சென்னை:
நடிகை திரிஷா பீட்டாவில் இல்லை என்று அவரின் அம்மா உமா உறுதியாகக் கூறினார். மேலும் திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை ஆணையரிடம் புகாரும் அளித்தார். பீட்டாவில் திரிஷா உறுப்பினராக இல்லை என்று மறுத்தார் உமா.

நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் உமா காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளார். மேலும், படிப்பிடிப்பில் திரிஷாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

முன்னதாக, பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர் திரிஷா என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறினர். ஜல்லிக்கட்டு எதிராக பீட்டா செயல்பட்டு வருவதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காரைக்குடியில் நடைபெற்ற திரிஷாவின் படப்பிடப்பு தளத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
மேலும், திரிஷா வெளியிட்ட டிவிட்டர் தகவல் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு அவரை ஆபாசமாகவும் கொச்சையாகவும் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இதனால் தனது டிவிட்டர் கணக்கை திரிஷா மூடிவிட்டார்.

இதனிடையே, நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான செய்திகளை வெளியிட்டு இருப்பதாகக் கூறி அவரது தாய் உமா கிருஷ்ணன், இன்று சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திரிஷா பீட்டாவில் பெரிய அளவில் இல்லை. அவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெரு நாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று பீட்டா ஏற்பாடு செய்திருந்த விளம்பர படத்தில்தான் நடித்தார். அவ்வளவுதான். அதுகூட நீண்ட காலத்திற்கு முன்பு! இவ்வளவு பிரச்னை இருக்கும் என்று அப்போது தெரிந்திருந்தால் திரிஷா அதனை செய்திருக்க மாட்டார்.

நாங்களும் தமிழர்கள்தான். நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. மேலும், திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள். அவருக்கு நிறைய போட்டியாளர்களும், எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இதனை செய்திருக்கவேண்டும். ஆனால் யாரென்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை.

திரிஷாவின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கான உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பிரச்சனை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடமும் பேசி இருக்கிறேன். அவரும் சென்னை வந்த உடன் பேசுவதாக உறுதி அளித்துள்ளார். இனி பீட்டா தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று உமா கிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.