தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற வைக்கோல் லாரிகளுக்கு தடை

IMG_0533 செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. அதே சமயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் மாடுகளுக்கு தீவனமான வைக்கோல் சின்ன பிக் அப் என்றழைக்கப்படும் ஜீப்களில் மட்டுமின்றி லாரிகளிலும் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் சாலைகளில் வைக்கோலை ஏற்றிவரும் போது சாலைகள் முழுமையாக அடைத்து சாலையின் ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களை இடித்து சேதப்படுத்திவிட்டு செல்வதால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும், லாரிகள் சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உரசி தீ பிடித்து எரிவதும் ஆங்காங்கே நடந்து வருவதால் குறுகிய சாலையான புளியரை-கேரளா சாலைகளில் அதிகளவு வைக்கோலை ஏற்றி கேரளவுக்கு செல்லும் லாரிகளுக்கு போலீசார் நேற்று மாலைமுதல் தடை விதித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை, புளியரை ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஓட்டுனர்கள், கிளினர்கள் சாலையிலேயே படுத்து சாப்பாட்டுக்கு தவித்து வருகின்றனர்.