நான்கு தென்மாவட்டங்களில்… கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும்!?

Published:

corona kolam
corona kolam

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக மாறியதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சிவப்பு மண்டலமாக இருந்து, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப் பட்டுள்ளது. புதிதாக கொரோனா தாக்கல் இல்லாத நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்தது. இதில் 54 பேர் குணம் பெற்று வீடுகளுக்கு திரும்பினர். மீதம் உள்ளவர்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதில் 22 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இவர்களில், ஏப்.10 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மீதமிருந்த 26 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். ஏப்.18-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் கடந்த 12 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் எவருக்கும் புதிதாக தொற்று தென்படவில்லை.

tamilnadu apr29
tamilnadu apr29

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 15 நாட்களாக புதிதாக எவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. இம்மாவட்டத்தில் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

தென்காசி மாவட்டத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் தென்காசி அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இங்கும் கடந்த 5 நாட்களாக புதிதாக எவருக்கும் தொற்று கண்டறியப் படவில்லை.

இதனால் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு 4 மாவட்டங்களையும் மாற்றி மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இம்மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதை அடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img