ராமானுஜரைப் பற்றி எழுதுவதால், அவரது ஆன்மிகக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டதாகப் பொருள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளர். இன்று வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான பேட்டியாக அவரது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி… கேள்வி :- இராமானுஜரைப் பற்றி இளம் வந்திலேயே தெரிந்து கொண்டீர்கள் என்றும், அவரது சீர்திருத்தச் சிந்தனையினால் கவரப்பட்டீர்கள் என்றும், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஆனாலும் இதுவரை இராமானுஜரைப் பற்றி எழுதாதற்குக் காரணம் உண்டா? பதில் :- குறிப்பிட்டு எந்தக் காரணமும் இல்லை. இராமானுஜரைப் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு அப்போது ஏற்படவில்லை. மதத்திலே புரட்சி செய்த மகான்களில் இராமானுஜரும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மாற்றத்திற்கு வித்திட்ட அப்படிப்பட்ட சம்பவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சிந்தனைக்கு விருந்தாக்கிட வேண்டுமென்ற கோரிக்கை வந்த போது, அதை ஏற்க முன் வந்தேனே தவிர, இராமானுஜரின் வரலாற்றில் ஒரு பகுதியை நான் எழுதுகிறேன் என்பதால், அவருடைய ஆத்திகக் கொள்கைகளில் நான் மூழ்கி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றோ, நான் நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் சுயமரியாதை – நாத்திகக் கொள்கைகளை விட்டு விட்டேன் என்றோ பொருள் அல்ல. கேள்வி :- திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர் என்ற வகையில் இந்த இயக்கம் எவ்வாறு இராமானுஜரைப் பார்க்கிறது என்று கூற முடியுமா? ஆன்மீக மற்றும் பிராமணீய சம்பிரதாயத்தில் வந்தவர் அவர். அப்படி இருந்தும் அவரைப் பற்றி ஏன் பெரியார் கூட உயர்வான எண்ணங்கள் கொண்டிருந்தார்? பதில் :- இராமானுஜர் அனுதினமும் ஆன்மீகம் போற்றியவர் – அதே நேரத்தில் மதங்களுக்கு அப்பாற்பட்டு எம்மதமும் சமம் என்ற உயரிய நெறியில் வாழ்க்கையை நடத்தியவர். அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வெறுத்து ஒதுக்கத் தக்கவர்கள் அல்லர் என்ற சீரிய எண்ணத்தோடு வாழ்ந்து காட்டியவர். திராவிட இயக்கத்தைச் சார்ந்து வளர்ந்தவன் என்ற வகையில் இராமானுஜரின் ஆன்மீகக் கொள்கைகளுடன் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் சமரசமும் இல்லை என்ற போதிலும், அவரது மதச் சார்பற்ற அணுகுமுறையைப் பாராட்டுகின்ற பண்பினைக் கொண்டுள்ளோம். அதனால் தான் அவர் ஆன்மீக, பிராமணீய சம்பிரதாயத்தில் வந்த போதிலும், அதையே முதன்மையாகக் கருதி நாங்கள் கவலை கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் மூதறிஞர் ராஜாஜி, அக்ரஹாரத்தில் தோன்றிய அதிசய மனிதர் வ.ரா., மூத்த வழக்கறிஞர் வி.பி. ராமன், பிரபல நரம்பியல் மருத்துவர் பி. ராமமூர்த்தி, திரைப்பட இயக்குனர் பஞ்சு (கிருஷ்ணன்-பஞ்சு), பத்திரிகையாளர் சாவி, சின்னக்குத்தூசி, காவியக்கவிஞர் வாலி என்று சொல்லிக் கொண்டே போகலாம்; அவர்கள் எல்லாம் பிராமணர்கள் எனினும், எங்கள் உணர்வுகளோடு ஒன்றி விட்டவர்கள்தான்! கேள்வி :- இராமானுஜர் செய்த சமூக சீர்திருத்தங்களில் எதனை மிக முக்கியமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? பதில் :- மற்றெல்லோரையும் போலவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் பாகுபாடு காட்டாமல் சமமாக மதிக்க வேண்டும்; அவர்களைக் கை தூக்கி உயர்த்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதை அவர் செய்த சமூக சீர்திருத்தங்களிலேயே தலையாயது என்று நான் கருதுகிறேன். கேள்வி :- அவர் செய்த சீர்திருத்தங்கள், அவர் விரும்பிய விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி உள்ளனவா? அவர் தத்துவங்களைப் பின்பற்றுவோர்கள் அவரது சிந்தனைகளைச் செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல முடியுமா? பதில் :- இராமானுஜரும், திராவிட இயக்கமும் மிகவும் விரும்பிய அளவுக்கு, அவர் செய்த சீர்திருத்தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சமுதாயத்தில் அவர் வாழ்ந்த அந்தக் காலக் கட்டத்தில் ஓரளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. இராமானுஜருடைய தத்துவங்களைப் பின்பற்றுவோரில் பெரும்பாலோர் அவருடைய சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார்களா என்பதைக் காலம் தான் கணிக்க வேண்டும். கேள்வி :- ஆன்மீகக் குருக்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பவர்கள், அதனை மிகைப்படுத்தி சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. இராமானுஜரைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட படைப்புகளில் உண்மை நிகழ்வுகள் எவை? புனைந்து கூறப்பட்ட விவரங்கள் எவை? என்று ஒரு கதாசிரியர் என்ற வகையில் எப்படிப் பிரித்துப் பார்ப்பீர்கள்? பதில் :- “மதங்களில் புரட்சி செய்த மகான், இராமானுஜர்” என்ற தொடர் “கலைஞர் தொலைக்காட்சி”யில் ஒளி பரப்பப்படும்போது, உங்களுடைய இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும். கேள்வி :- தி.மு.க. பிற மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தைப் பற்றி அதிகமான விமர்சனங்கள் வைக்கும் கட்சி என்ற ஒரு பரவலான கருத்து உண்டு. இந்தக் கருத்தை நீங்கள் எழுதும் இந்தத் தொலைக்காட்சி தொடர் தகர்க்குமா? பதில் :- தி.மு.க. வைப் பற்றி நீங்கள் கூறும் பரவலான கருத்து உண்மையானதல்ல; எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து. இன்னும் சொல்லப் போனால், தி.மு. கழகத்திலே உள்ள 90 சதவிகிதம் பேர் நீங்கள் கூறுகின்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் இந்து மதத்திற்கே தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரின் தீவிரவாதச் செயல்பாடுகளைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கேள்வி :- நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதனால், உங்கள் படைப்பு இராமானுஜர் வாழ்க்கை நிகழ்வுகளை திரித்துக் காட்டிவிடுமோ என்ற ஐயங்கள் எழுப்புவர்களுக்கு உங்கள் பதில் என்ன? பதில் :- என்னைப் போன்றோர் இறை மறுப்பாளர்களாக இருந்தாலும், என்னைச் சுற்றியிருப்போரில் சிலரும், எங்கள் இயக்கத்திலே உள்ளவர்களில் சிலரும் அதிலே முழு ஈடுபாட்டோடு இல்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய இந்தத் தொடர் வெளி வந்த பிறகு, இராமானுஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை நான் திரித்துக் காட்டியிருக்கிறேனா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எங்கள் இயக்கக் கருத்துகளை, குறிப்பாக இறை பற்றிய எண்ணங்களை நாங்கள் யார் மீதும், ஏன் எங்கள் குடும்பத்தினர் மீதும்கூடத் திணித்துப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. எனவே என்னைப் பொறுத்தவரையில், நான் இறை மறுப்பாளனாக இருப்பதால், இராமானுஜருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒருசில சம்பவங்களைத் தொடாமல் விட்டாலும் விடுவேனே தவிர, எதையும் திரித்தோ, இட்டுக்கட்டியோ எழுத மாட்டேன் என்பது மட்டும் உறுதி; திருத்தம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இதைத் தான் தங்களுடைய சந்தேகத்திற்கு விடையாக அளிக்க விரும்புகிறேன். கேள்வி :- தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, இராமானுஜரையும், அவரது சமூகச் சீர்திருத்தங்களையும் அரசாங்கம் பெரிதாக அங்கீகரித்ததாகத் தெரியவில்லையே; எடுத்துக்காட்டாக அவர் கோயில் வழிபாட்டில் தமிழை அறிமுகம் செய்தது. பதில் :- தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, இராமானுஜரைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக அங்கீகரிக்காவிட்டாலும், அவருடைய சமூகச் சீர்திருத்தங்களையெல்லாம் அங்கீகரிக்கும் வகையில் செயல்பட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமேயானால், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆணை” – “தமிழில் ஆகம நுhல்கள்” – “தமிழில் வழிபாடு” – “தமிழில் வேள்வி” – “தமிழ் போற்றி” புத்தகங்கள் வெளியீடு” – ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதியில் உள்ள திருக்கோவில் திருப்பணி – சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்வியப் பிரபந்த பயிற்சி மையங்கள் என்று கழக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றிய நீண்ட பட்டியலே உண்டு.
ராமானுஜரை எழுதுவதால், அவரது கொள்கையை ஏற்றதாகப் பொருள் இல்லை: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari