சென்னை: கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால், பெண்ணைக் கொலை செய்து மழை நீர்க்கால்வாயில் தூரத்து உறவினரே போட்டு விட்டுச் சென்றுள்ளார். சென்னை- சேலையூரை அடுத்த தேணுகாம்பாள் நகர் 1 ஆவது பிரதானச் சாலையில் ஞாயிறு அன்று காலை இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் மழைநீர் கால்வாயில் சடலமாகக் கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் குறித்து நேற்று அடையாளம் தெரிந்தது. அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் ஜெரினா மரியா (27) என தெரிய வந்தது. சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி செய்து வந்தார் ஜெரினா மரியா. போலீஸார் வெளியிட்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் படத்தைப் பார்த்து ஜெரினா மரியாவின் தாயார் அல்போன்சா அடையாளம் காட்டியுள்ளார். பின்னர், ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரது சகோதரர் ஜெரினா மரியாவின் உடலைப் பார்த்து உறுதி செய்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெரினா மரியா வீடு திரும்பவில்லை. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் அல்போன்சா புகார் செய்தார். இதை அடுத்து, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சேலையூர் போலீஸ் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் ஜெரினா மரியாவை அவரது நெருங்கிய உறவினர்தான் அழைத்துச் சென்றதாகத் தெரிய வந்தது. இதை அடுத்து, அவரைப் பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பெண் கொலை குறித்து தகவல் தெரியவந்தது. ஜெரினா மரியாவின் உறவினர் ஹென்றி ராபர்ட் (35). திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெரினா மரியாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உறவினர்கள் எனத் தெரிய வந்ததால், இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ஹென்றி ராபர்ட் அவ்வப்போது செலவுக்கு ஜெரினா மரியாவிடம் பணம் பெற்றுள்ளார். தான் சொந்தமாகத் தொழில் செய்வதாகக் கூறி ஜெரினா மரியாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வாங்கியிருந்தாராம். இந்தப் பணத்தைக் கேட்டு ஜெரினா மரியா அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ராபர்ட் கென்னடி, ஜெரினாவிடம் கூறியதன் பேரில், ஜெரினா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, வாய்த் தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில், ஜெரினாமரியாவை ஷு லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்புள்ள 1 செயின், நெக்லஸ், கம்மல் மற்றும் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பின்னர் பிரேதத்தை நள்ளிரவு தன்னுடைய காரில் எடுத்துக் கொண்டு மாடம்பாக்கத்தில் வீசிச் சென்றுவிட்டதை ஒப்புக் கொண்டார். அதன்பேரில், சந்தேக மரணமாகப் பதிவான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அந்தப் பெண்ணைக் கொலை செய்த ராபர்ட் கென்னடி (35), கைது செய்யப்பட்டு, அவர் ஜெரினாவிடமிருந்து அபகரித்த 10 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.1,80,000/- மற்றும் லான்சர் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கொலை தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தூரத்து உறவினர் ஒருவரே இவ்வாறு பெண்ணைக் கொலை செய்தது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது.
கொடுத்த பணத்தைக் கேட்டதால் இளம்பெண் கொலை: உறவினரே கொலை செய்த கொடூரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari