இன்று முதல் நெல்லைக்கு தாம்பரத்தில் இருந்து அந்த்யோதயா ரயில்; முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

andyodaya train - 2026

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இன்று முதல் முன்பதிவில்லா அந்த்யோதயா விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அந்த்யோதயா விரைவு ரயிலின் அறிமுக விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதை ஒட்டி, தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக உருவெடுத்துள்ளது. இது இன்று முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி சேவையாக புதிய ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். இது, சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். பின்னர் தினசரி தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 3.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறு வழியில் திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30க்கு புறப்படும் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45க்கு வந்தடையும்.

இந்தப் புதிய அந்த்யோதயா விரைவு ரயில் அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்ட உள்பக்க கூரை, லக்கேஜ்கள் வைக்கப்படும் பலகைகளில் குஷன் வசதி, ரயில் பெட்டிகளில் எல்.இ.டி. விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகள், குடிநீர் சுத்திகரிப்பான், தீயணைக்கும் கருவிகள். மேம்பட்ட குப்பைத் தொட்டிகள், பயோ கழிப்பறைகள் ஆகியவை இருக்கும்.

முன்னதாக, சோதனை அடிப்படையில் அண்மையில் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கிப் பார்க்கப் பட்டது. ஆனால் கோடை விடுமுறையை ஒட்டி தொடர்ந்து இந்த ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு எதையும் ரயில்வே துறை வெளியிடவில்லை. இந்நிலையில், தாம்பரம் -செங்கோட்டை ரயில் விடப்பட வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.