கிருஷ்ணகிரி அருகே ஆலமரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

19.04கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அருகே சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு சிறுவன், ஒரு சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதி ஓமக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வில்சன் (50) அங்குள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் காசாளராகப் பணிபுரிந்தார். இவரின் மனைவி ரெஜினாமேரி (42) ரெட்டிவலசை அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியிலிருந்தார். இவர்களின் மகன் ஜோயல் (9) நான்காம் வகுப்பும், மகள் ஜெனிதா (6) ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் நால்வருடன், வில்சனின் தாயார் நெட்டில்டா சுசிலாபாய் (70), மூத்த சகோதரி பிரேமகுமாரி (52), இளைய சகோதரி லில்லி ஜாய் மேரி (47) என 7 பேரும் ஓமக்குப்பத்தில் இருந்து திருவண்ணாமலை அருகேயுள்ள கீழ்பெண்ணாத்தூர் சர்ச் ஒன்றில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் சென்றனர். காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் திலீப்குமார் (28) ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார், சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நாற்சாம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோர ஆலமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் திலிப்குமார் பலத்த காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.