250 இளைஞர்களுக்கு திறன் எய்தும் இலவசப் பயிற்சி: இன்றும், நாளையும் விண்ணப்பங்கள் விநியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கான திறன் எய்தும் இலவசப் பயிற்சி முகாமில் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட குறிப்பில், நாட்டில் அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள், தனி குடியிருப்புகல், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பல்வேறு வகைகளில் நகரங்கள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது பயிற்சி பெற்றவர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். எனவே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்த 21 நாள் திறன் எய்தும் பயிற்சியை இம் மாதம் 27-ம் தேதி முதல் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இப் பயிற்சி முழுவதும் இலவசம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை இப் பயிற்சி நடத்தப்படும். பணியை சிறப்பாக நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி நாட்களில் தினமும் தேனீர், மதிய உணவு இலவசம். இப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் தகுதியானவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக 250 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச்சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றுகள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை இன்று செவ்வாய்க்கிழமை நாளையும் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.