20 July19 Palani samy CM - 2026

திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் தன்மை கொண்டவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க அன்பழகன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

பேராசிரியர் க அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திமுகவின் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

anbhazhagan - 2026

பேராசிரியர் க அன்பழகன் 1957-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை உறுப்பினராக முதல்முறையாக போட்டியிட்டு தமிழக சட்டசபையில் அடியெடுத்து வைத்தவர். பேராசிரியர் க அன்பழகன் 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராகவும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலில் தடம் பதித்து வந்தவர்.

9 முறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுகவிற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending