தமிழக அரசுடன் பேசத் தயார்: மீனவர் பிரச்னையில் சிறீசேன

கொழும்பு: மீனவர் பிரச்னை குறித்து தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்தார். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியாவுக்கு ஆளும் கூட்டணி அரசு விட்டுக் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி புகார் தெரிவித்து வருகிறது. அக்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு சிறீசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொழும்பில் தன்னைச் சந்தித்த மீனவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களிடையே அவர் பேசியபோது, இந்தியாவைச் சேர்ந்த சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் நமது கடற்பகுதிக்கும், நமது மீனவர்களுக்கும் தீங்கிழைப்பதை தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் நாம் உணர்த்த வேண்டும். இந்தியாவுடனான நமது உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் உத்தேசித்துள்ளேன் என்று கூறினார். மேலும், இந்தியர்கள் யாரையும், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அல்லது கப்பல்களைப் பறிமுதல் செய்யும்படி கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் நான் மேற்கொண்ட பயணத்தின்போது, தொடர்கதையாகி வரும் இரு நாட்டு மீனவர்களின் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்டகால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆழ்கடல் மீன்பிடித்தலை கைவிடும்படி, இந்திய மீனவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில், தமிழர்கள் ஆட்சி நடைபெறும் வடக்கு மாகாண கவுன்சில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். கொழும்பில் உள்ள இந்தியத் தூதருடன் கலந்தாலோசித்து, இதுதொடர்பாக வடக்கு மாகாண கவுன்சில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்டார் சிறிசேன.