விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் கடற்புலி பாகீரதி இலங்கையில் கைது

Published:

LTTE-Logo_eelamதனது தாயைப் பார்ப்பதற்காக இலங்கை சென்ற பாகீரதி என்ற பெண் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி, கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பாகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒரு மாத விடுமுறையைக் கழித்து விட்டு, பிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பும் வழியில் திங்கள் கிழமை கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல் துறை கூறியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல் துறையினர் விசாரணையில் வைத்துள்ளனர். தாம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பாகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோது, பாகீரதி கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பாகீரதியுடன் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், போர் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே அவர் இலங்கை வந்திருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

Related articles

Recent articles

spot_img