‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநர் படத்தில் இனி நடிக்க மாட்டேன்: நடிகை ஆனந்தி

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநரின் படத்தில் இனி நடிக்கமாட்டேன் என நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடித்தார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கிய இந்தப் படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றது. இந்தப் படத்தில் ஆனந்தி நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதுபற்றி ஆனந்தி ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘இயக்குநர் கதையை முதலில் சொன்னபோது அழகான இளம்பருவக் காதல் கதையாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சியைப் படமாக்கும்போது அது அடல்ட் காமெடி படம் என்று எனக்குத் தெரிந்தது. அதுவரை வசனங்கள் பற்றியும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. படப்பிடிப்புக்கு முன்னால் எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான். இது என்னுடைய முந்தைய படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் கதை பற்றி முன்பே தெரிந்திருந்தால் நான் நடித்திருக்கமாட்டேன். அடல்ட் காமெடி படங்கள் எனக்குப் பிடிக்காது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குநரின் படத்தில் இனி நடிக்கமாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.