சிபிஐ அதிகாரிகள் மீது வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சக வருமான வரித்துறை அலுவலர்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியது..: லக்னோவில் வருமான வரித்துறை அதிகாரி நிரஞ்சன் குமார் என்பவர், 2011-12-ம் நிதியாண்டுக்கான வரி கணக்கீடு தொடர்பாக ஒருவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக ரூ. 2 லட்சம் வாங்கினார். அப்போது, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அங்கே வந்து, சிபிஐ குழுவினர் மீது தீயணைப்புக் கருவி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தினர். இதில், சிபிஐ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப் பட்டுள்ளது என்றார்.