பெங்களூருவில் பள்ளி மாணவி சுட்டுக் கொலை: ஒருதலைக் காதலாம்!

id-card-bangalore-student பெங்களூரு: பெங்களூருவில், உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஒரு நபரால் சுடப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். அவரை ஒருதலையாகக் காதலித்த பள்ளி உதவியாளர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பி விட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 18 வயதான அந்தப் பெண் பெயர் கௌதமி என்றும், அவர் பள்ளி வளாகத்தில் அவருடைய தோழியுடன் சேர்த்து அவர் சுடப்பட்டதாகவும், காயமடைந்த தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சுட்டுவிட்டு தப்பியோடிய 30 வயது நபர் மகேஷைத் தேடும் பணியில் 3 போலீஸ் குழு ஈடுபடுத்தப் பட்டுள்ளது. அவர் அந்த 12ம் வகுப்பு மாணவியைக் காதலித்தாராம். கௌதமி பெங்களூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரில் இருந்து படிக்க வந்தவராம். அவருடைய தோழி ஸ்ரீஷா அளித்த தகவல்படி, மூன்றாவது மாடியில் இருந்த கௌதமியின் அறைக்கதவைத் திறக்க முயன்றபோது, செவ்வாய் இரவு 11 மணி அளவில் சுடப்பட்டாராம். இதனை காவல் ஆணையர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார். தலைமறைவான மகேஷ் அந்தப் பள்ளியில் உதவியாளராக கடந்த இரண்டு வருடமாக வேலை செய்து வருகிறாராம். ஒரு தலைக் காதலால் ஒரு பள்ளி மாணவி துப்பாக்கியால் சுடப்பட்டது பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.