தெலங்கானாவில் போலீஸார் இருவர் சுட்டுக் கொலை

தெலங்கானாவில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் 130 கி.மீ. தொலைவில் உள்ள சூர்யாப்பேட்டை பஸ் நிலையத்தின் அருகே பஸ்களை புதன் கிழமை இரவு போலீஸார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர், போலீஸார் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் போலீஸார் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிள். இதில், இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் உஷார் படுத்தப் பட்டனர். பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்தில் அந்த மர்ம நபர்கள் இருவரும் பயணம் செய்ததாகவும், பஸ்ஸை சோதனை செய்த போது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார்.