சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி, சீனிவாசன் நேரில் வாழ்த்து

suresh-raina-priyanka புது தில்லி; தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் வருகை தந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்கள் பிராவோ, ஸ்டீபன் பிளமிங், ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகியோர் கலந்து கொண்டனர். 28 வயதான கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், தற்போது ஆம்ஸ்டர்டாமில் உள்ள பிரியங்காவும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பமும் நெருங்கிய நட்பு கொண்டது. திருமணத்துக்குப் பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு, பிரியங்கா இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு, வரும் ஏப். ஆம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வருகிறார் ரெய்னா. அப்போது அவருடைய மனைவி பிரியங்காவும் சென்னை வந்து, அவரை உற்சாகப் படுத்தவுள்ளார்.