திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, மாநில ஆளுநர் சதாசிவம், பேரவையில் உரையாற்றத் தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் இடைமறித்துப் பேச முயன்றார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநில நிதியமைச்சர் மணி, பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் குரலெழுப்பினர். இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர்களை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர். மதுக்கூட விடுதி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மணி வரும் 13-ஆம் தேதி மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியிலும் ஆளுநர் சதாசிவம் தொடர்ந்து உரையாற்றினார். அதன் பின்னர், அச்சுதானந்தன் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பேரவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், சிறிது நேரம் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.
கேரள சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari