parliament புது தில்லி: நிலம் கையகப் படுத்துதல் மசோதா, 9 திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று இந்த மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடந்தது. இதற்காக மக்களவை நேரம் நீட்டிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக மத்திய அரசு 9 திருத்தங்களை செய்திருந்தது. இந்தத் திருத்தங்களை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் கொண்டு வந்தார். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் குடும்பங்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.  மசோதாவில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தங்களுக்கு, முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ., கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் அகாலி தளம் திருத்தங்களுக்குப் பின்னர் ஆதரவு தெரிவித்தன. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் கட்சிகள் கோரின. நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபடி அவை வெளிநடப்பு செய்தன. இந்த மசோதா காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தன. இறுதியில் இந்த மசோதா 9 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளித்தது. சிவசேனா இந்த ஓட்டெடுப்பைப் புறக்கணித்தது. மசோதா நிறைவேறியதை அடுத்து, நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending