புது தில்லி: “தேசத்தின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் அரசு மேலும் 800 பிரிவினைவாதிகளை விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… தேசப் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய பாஜக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. எந்த அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசில் நாங்கள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். நாட்டுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஜம்மு-காஷ்மீர் ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை விவகாரம் தொடர்பாக தற்போது எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. எனது விளக்கத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து விட்டேன். மஸரத் ஆலம் விடுதலை குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளேன். அதுகுறித்து மாநில அரசின் பதில் கிடைத்ததும், மேற்கொண்டு எனது கருத்தைத் தெரிவிப்பேன். மஸரத் விடுதலை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது என்னுடன் பேசவில்லை. இப்போது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாகவே, அவருடன் (முஃப்தியுடன்) நான் பேசவில்லை என்றார் ராஜ்நாத் சிங்.
தேசப் பாதுகாப்பே முதலில்; கூட்டணி இரண்டாம் பட்சம்: ராஜ்நாத் சிங்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari