புது தில்லி: கட்டண உயர்வு இல்லை, அதே நேரம் மக்கள் பயன்பாடு அதிகரித்து, ரயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது.
பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிகம் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் ரயில் பயணத்தையே நாடுகின்றனர். இந்த வகையில், நாடு முழுவதும் மக்களிடையே ரயில் பயணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இது, ரயில்வே துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகிறது.
2017-18ஆம் நிதி ஆண்டில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி. கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுடன் இதனை ஒப்பிடும் போது, ரூ.2,551 கோடி வருவாய் அதிகம்.
இந்த வருட பட்ஜெட்டிலும், ரயில் டிக்கெட் கட்டணம் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. இந்நிலையில் டிக்கெட் கட்டணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ரயில்வேக்கு அதிகமாகவே உள்ளது. புறநகர் ரயில் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவும் 6.3 சதவீதம் என பெருகியுள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டில் ரயில்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 8219.38 மில்லியன். அடுத்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 8267.32 மில்லியனாக உயர்ந்துள்ளது. வரும் நிதி ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் டிக்கெட்டுகளுக்கு இணையாக சில விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை குறைத்து நிர்ணயித்த போதிலும் ரயில் பயணிகள் டிக்கெட் வருமானமும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது ரயில்வேயின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.