அரசுப் பள்ளிகளில் டீச்சர் வருகைப் பதிவை சரி செய்யும்போது மாணவர்களின் பெயரைக் கூறி அழைத்தால் மாணவர்கள் பதிலுக்கு யெஸ் மிஸ் / யெஸ் சார் சொல்லக்கூடாது. அதற்குப் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் மத்தியில் தேசியவாதத்தை விதைப்பதற்கான முயற்சியே இது என அரசு விளக்கமும் அளித்துள்ளது.
முன்னதாக 2017 நவம்பரில் மத்தியப் பிரதேச பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா, “வருகைப் பதிவு சரி பார்க்கும் ஆசிரியரின் குரலுக்கு யெஸ் மிஸ் / யெஸ் சார் என்று கூறுவது தேசியவாதத்தை வளர்ப்பதாக இல்லை” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. “தேசிய உணர்வை கட்டாயமாக புகுத்த முடியாது. அரசாங்கம் முதலில் பாடத்தின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.