காவிரி மேலாண்மை வாரியம் என வரைவுத் திட்டத்தில் பெயரைக் குறிப்பிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.

புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் என்று, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவுத் திட்டத்தில் பெயரைத் திருத்திக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவு எடுத்தாலும், நீர் திறப்புக்கான கால அவகாசம் இருந்ததால், கர்நாடகத் தேர்தல் முடியும் வரை இந்த விஷயத்தை இழுத்துக் கொண்டே செல்ல முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு ஏற்றார்ப் போல், உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவை அவ்வப்போது வழங்கி குழப்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்த போது, மத்திய அரசிடம் இது குறித்து ஒரு ஸ்கீம் தயாரித்து அளிக்குமாறு கூறியதில் இருந்து இந்தப் பிரச்னை தொடங்கியது. ஸ்கீம் என்பது ஒரு திட்டம்தானே தவிர அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று கர்நாடகமும் கேரளமும் சொல்ல, அதை வைத்து சில நாட்கள் அரசியல் நடந்தது. உச்ச நீதிமன்றமும் பின்னர் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, அதுவும் உள்ளடக்கியது என்று குழப்பியது. அப்போதே இது குறித்து தெளிவாகச் சொல்லுமாறு மத்திய அரசு கேட்க, நீங்கள் ஒரு வரைவுத் திட்டத்தை கொண்டு வந்து அளியுங்கள், பின்னர் பார்க்கலாம் என்று கூறியது.

அதன்படி, மத்திய அரசும் வாய்தா வாங்கி, கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில் சீலிட்ட உறையில் வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதன்பின்னர், மத்திய அரசு தாம் முன்னர் கூறியபடி, சில பெயர்களைச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் அளிக்க, இன்று அந்த வரைவுத் திட்டத்தில் பெயரை மாற்றி அதனை காவிரி மேலாண்மை வாரியம் என்றே குறிப்பிடுமாறு கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மே 14 ஆம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவுஅறிக்கையை அளித்த போது, மே 16ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, காவிரி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் கர்நாடகா அரசும் ஒப்புக் கொண்டன. அதன்படி வரைவுத் திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என்றே மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளையே தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.

இதனிடையே, காவிரி குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறு கர்நாடகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப் பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.